வாஷிங்டன்: அமெரிக்க பிரதிநிதிகள் சபை சமீபத்தில் 95 பில்லியன் டாலர் மதிப்பிலான கூடுதல் நிதி மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதில் பெரும்பாலான நிதி, ஈரானுக்கு எதிரான போர் நடவடிக்கைகளுக்காக பென்டகனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா 216–214 என்ற மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்டு, தற்போது செனட் சபையின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது.
ஏற்கனவே பாதுகாப்புத் துறை செயலர் பீட் ஹெக்செத், செனட் விசாரணையில் பதிலளித்தபோது, ஈரான் தொடர்பான ராணுவ நடவடிக்கைகளுக்காக இதுவரை 37.5 பில்லியன் டாலர் செலவிடப்பட்டுள்ளதாகவும், கூடுதல் நிதி தேவைப்படுவதாகவும் தெரிவித்திருந்தார். அப்போதே இந்த கோரிக்கைக்கு எதிர்ப்பு எழுந்திருந்தாலும், தற்போது பிரதிநிதிகள் சபை மசோதாவை நிறைவேற்றியுள்ளது.
இந்த மசோதாவில், ஆயுதப்படைகள் மற்றும் உளவுத்துறை அமைப்புகளுக்கு சுமார் 73 பில்லியன் டாலர் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளுக்கான நிதியே முக்கிய பங்காக உள்ளது.
மேலும், அதிபர் டொனால்ட் டிரம்பின் வர்த்தகக் கொள்கைகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 12 பில்லியன் டாலர் நிதியுதவி வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல், “Save America Act”-க்கு போதுமான ஆதரவு இல்லாத நிலையில், நாடு முழுவதும் புதிய தேர்தல் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, தேர்தல் தொடர்பான திட்டங்களுக்கு கூடுதலாக 10 பில்லியன் டாலர் ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் பின்னணியில் எழும் முக்கிய கேள்வி என்னவென்றால், இந்த மசோதாவுக்கு செனட் சபையும் ஒப்புதல் அளிக்குமா என்பது தான்.
தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் முறிந்ததிலிருந்து, ஈரானில் உள்ள ராணுவ மையங்கள், ட்ரோன் தளங்கள் மற்றும் ஆயுதக் கிடங்குகள் மீது அமெரிக்கா தொடர்ந்து தீவிர வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
அதுமட்டுமல்லாமல், ஈரானின் அணு ஆயுதத் திட்டத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் நிலத்தடி பதுங்கு வசதிகள் அமைந்துள்ள பிகாக்ஸ் மவுண்டன் பகுதியையும் விரைவில் தாக்கக்கூடும் என அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். சர்வதேச வர்த்தகத்திற்கு முக்கியமான ஹார்முஸ் நீரிணையை ஈரான் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சிப்பதாகவும், உலக பொருளாதாரத்தைப் பாதுகாக்கும் நோக்கில் அந்தப் பகுதியில் அமெரிக்காவின் ராணுவக் குவிப்பும் தாக்குதல்களும் தொடரும் என்றும் வெளியுறவுத்துறை செயலர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.
அண்மையில் ஜோர்டான் மற்றும் ஈராகில் நடைபெற்ற ஈரான் ஆதரவு தாக்குதல்களில் அமெரிக்க வீரர்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, பழிவாங்கும் நடவடிக்கையாக அமெரிக்கா தனது தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது.இந்தச் சூழ்நிலையைப் பார்க்கும்போது, அமெரிக்கா உடனடியாக போர் நிறுத்தத்துக்கு தயாராக இல்லை என்பதும், கூடுதல் நிதியைப் பெற்று ஈரானின் ராணுவத் திறனை மேலும் பலவீனப்படுத்தும் நோக்கில் செயல்பட்டு வருகிறது என்பதும் தெளிவாகிறது.
