சேலம்: சேலம் அரசு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மருத்துவப் பயனாளிகள் அவதி அடைந்தனர்.
சேலம் அரசு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 4 மாவட்டங்களுக்கான தலைமை மருத்துவமனையாகச் செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையின் அவசரச் சிகிச்சை பிரிவில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை மின்வெட்டு ஏற்படுவதாலும், அங்கு ஜெனரேட்டர் வசதி இல்லாததாலும் நோயாளிகள், அவர்களின் உறவினர்கள் மற்றும் குறிப்பாக மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பதிலும் பெறுவதிலும் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
குறிப்பாக, இரவு நேரத்தில் இந்த மின்வெட்டு தொடர்ந்து நீடிப்பதால் அவசரச் சிகிச்சை பிரிவில் உள்ள மருத்துவர்களும் செவிலியர்களும் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மின்சாரம் இல்லாதபோது நோயாளிகளின் உறவினர்கள் தங்களது கைபேசி (செல்போன்) டார்ச் வெளிச்சத்தைப் பயன்படுத்த வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது.
சேலம் அரசு பொது மருத்துவமனைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான உள்நோயாளிகளும் வெளிநோயாளிகளும் வந்து செல்லும் நிலையில், இங்கு குறைந்தபட்ச ஜெனரேட்டர் வசதி கூட இல்லாதது பொதுமக்களிடையே பெரும் குற்றச்சாட்டாக எழுந்துள்ளது.
அதுமட்டுமன்றி, கடந்த சில நாட்களாக யு.பி.எஸ் (UPS) வசதியும் முறையாகச் செயல்படவில்லை எனக் கூறப்படுகிறது. எனவே, இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு, நோயாளிகளின் உயிர்ப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பதே நோயாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்களின் முக்கியக் கோரிக்கையாக உள்ளது.
