மதலப்பட்டு ஊராட்சியில் குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

ரெட்டிச்சாவடி :ரெட்டிச்சாவடி அடுத்த மதலப்பட்டு ஊராட்சியில் பூசாரிபாளையம், சின்ன காட்டுப்பாளையம் பகுதி உள்ளது. இந்த பகுதி புதுச்சேரி மாநிலம் கிருமாம்பாக்கத்திற்கும், தவளக்குப்பம் இடையே அமைந்துள்ளது. இப்பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்களும், 4000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அன்றாட கூலி வேலைக்கு சென்று வாழ்வாதாரத்தை பெருக்கி வருகின்றனர்.

மேலும் ஒரு சிலர் கால்நடைகள் வளர்த்து விவசாயம் செய்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள பள்ளி மாணவர்கள் கடலூர் அரசு பள்ளிகளில் படித்து வருகின்றனர். மேற்படிப்புக்காக அன்றாடம் கடலூர் மற்றும் புதுச்சேரி பகுதிகளுக்கு சென்று உயர் கல்வி படித்து வருகின்றனர்.

பூசாரி பாளையத்தில் இருந்து புதுச்சேரி மாநிலம் பணித்திட்டு வரை பல ஆண்டுகளுக்கு முன் தார் சாலை அமைக்கப்பட்டது.அன்றாடம் போக்குவரத்து நிறைந்த சாலையாக உள்ளது. மேலும் பூசாரி பாளையம், மதலப்பட்டு, சின்ன காட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளுக்கும் இந்த சாலை பயன்படுகிறது. இந்நிலையில் நீண்ட நாட்கள் ஆனதால் சரிவர பராமரிக்காமல் இச்சாலையில் ஆங்காங்கே ஜல்லிகள் பெயர்ந்து, குண்டும் குழியுமாக காணப்படுகிறது.

இதனால் இச்சாலை வழியாக ஏராளமான வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் பாதிப்படைகின்றனர். மேலும் மழைக்காலங்களில் குண்டும் குழியுமான சாலையில் மழை நீர் தேங்குவதால் வாகன ஓட்டிகள் இதன் வழியாக செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர்.

சாலை நெடுகிலும் சிதறி கிடக்கும் கூர்மையான ஜல்லிகள் குத்தி அவ்வழியே செல்லும் வாகனங்களின் டயர் பஞ்சராவதால், பொதுமக்கள் நடுவழியில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் உள்ள சேதமான சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: