அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரக்கோரி பொதுமக்கள் சாலையில் சமைத்து போராட்டம்

கோபால்பட்டி : சாணார்பட்டி அருகே சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கூடிய கிராம மக்கள் சாலையில் சமைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.சாணார்பட்டி ஒன்றியம் செங்குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அத்திமடைபுரம் உள்ளது.

இங்கு சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில்செங்குறிச்சியில் இருந்து அத்திமடை பகுதிக்குச செல்ல சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் சாலை வசதி இல்லாததால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனைக் கண்டித்து தமிழர் தேசம் கட்சியினர் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள், சமையல் பாத்திரங்கள், கால்நடைகள் உள்ளிட்டவைகளை கொண்டு சாணார்பட்டி காவல் நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது, சாலை வசதி ஏற்படுத்தி தராததைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். பின்பு சாணார்பட்டி யூனியன் அலுவலகம் எதிரே, கண்டன கோஷங்களை எழுப்பி தரையில் அமர்ந்தும், சாலையில் சமைத்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து வட்டார வளர்ச்சி அலுவலர் மதியழகன், கிழக்கு தாசில்தார் பானுலட்சுமி, புறநகர் போலீஸ் டிஎஸ்பி சங்கர், சாணார்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அதிகாரிகளுடன் சம்பவ இடத்தை பார்வையிட்டு, சாலை வசதி அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்ததின் பேரில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். சாலை வசதி கேட்டு பொதுமக்கள், சாணார்பட்டி ஒன்றிய அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: