திருட்டு போன மின்மாற்றிக்கு மாற்றாக மின் வாரியத்தினர் புதிய மின்மாற்றி அமைக்காமல் அலைகழிப்பு

*கருகும் பயிர்களால் விவசாயிகள் கவலை

பெரணமல்லூர் : பெரணமல்லூர் அருகே திருட்டு போன மின்மாற்றிக்கு மாற்றாக புதிய மின் மாற்றி அமைக்காமல் மின்வாரியத்தினர் அலைகழித்து வருவதால், ஆடி பட்டம் பறிபோகும் நிலையில் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது முதல் தொடர் மின்வெட்டு தமிழக முழுவதும் நிலவி வருகிறது. இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் மிகுந்த பாதிப்படைந்து வருகின்றனர்.

இந்நிலையில், பெரணமல்லூர் பகுதியில் கடந்த மாதத்தில் பல்வேறு இடங்களில் மின்மாற்றியில் காப்பர் ஒயர் மற்றும் ஆயில் திருட்டு சம்பவம் நடைபெற்றது. இதில் ஆவணியாபுரம் ராஜபாட்டை சாலையில் விவசாயி ஒருவரது நிலத்தில் இருந்த மின்மாற்றியிலும் திருட்டு சம்பவம் நடந்தது‌. இதனால் அந்த பகுதியில் உள்ள விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் விவசாயத்திற்கு மின்சார வசதியின்றி கிணற்றிலிருந்து தண்ணீர் இறைக்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். தவிர மின் மாற்றியில் காப்பர் ஒயர்கள் திருடு போன சம்பவம் குறித்து பெரணமல்லூர் காவல் நிலையத்தில் கொழப்பலூர் மின் பகிர்மான நிலைய உதவி பொறியாளர் புகார் அளித்திருந்தார்.

இதைத்தொடர்ந்து புதிய மின்மாற்றி திருடு போன பகுதியில் பொருத்தப்படும் என விவசாயிகள் காத்திருந்தனர். ஆனால் புதிய மின்மாற்றி மாற்றாமல் காலம் கடந்ததால் விவசாயிகளும் புதிய மின்மாற்றி அமைக்க வேண்டும் என உதவி பொறியாளரிடம் வலியுறுத்தி வந்தனர். ஆனால் மின்மாற்றி இதுவரை அந்த பகுதியில் பொருத்தப்படாமல் இருப்பதால் ஆடிப்பட்டம் பறிபோகும் நிலையை கண்டு விவசாயிகள் கவலை அடைந்தனர்.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், எங்கள் பகுதியில் விவசாய நிலத்தில் அமைந்த மின் மாற்றி கடந்த மாதம் திருட்டு போனது. இதனால் மின்வாரியத்தினர் புதிய மின்மாற்றி பொருத்தி தருவார்கள் என நாங்கள் காத்திருந்தோம். ஆனால் அவர்கள் இதுவரை புதிய மின்மாற்றியை பொருத்தாமல் காலம் தாழ்த்தி வருவதால் தற்போது நடைபெறும் ஆடிப்பட்டத்தில் நாங்கள் எவ்வித பயிர் தொழிலும் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

மேலும் ஆடிப்பட்டத்திற்கென விதைத்த நாற்றுக்களும் தண்ணீர் இல்லாமல் வெயிலால் கருகி உள்ளதால், எங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்து மின்வாரியத்தினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து எங்கள் பகுதிக்கு புதிய மின்மாற்றி மாற்றி தர வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

விவசாயிகள் நிலை குறித்து மின்வாரியத்தில் தொடர்பு கொண்டு கேட்டபோது புதிய மின்மாற்றி அமைக்க நாங்கள் மாவட்ட தலைமையிடத்தில் தெரிவித்துள்ளோம். விரைவில் புதிய மின்மாற்றி அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தனர். விவசாயிகளின் நிலைமையை கருத்தில் கொண்டு உடனடியாக புதிய மின்மாற்றியை மாற்றி தர சம்பந்தப்பட்ட துறையினர் முன்வர வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: