ராயக்கோட்டை : ராயக்கோட்டையில், ரோஜா தோட்டங்களில் செடிகள் அடர்த்தியாக வளரும் வகையில், கவாத்து பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டையில் காய்கறி பயிர்களுக்கு அடுத்து விவசாயிகள் பூக்களை சாகுபடி செய்து வருகின்றனர். தற்போது ஆடி மாத அம்மன் கோயில் திருவிழாக்கள் அதிகம் நடந்து வருகிறது. இதனால் பூக்களின் தேவை அதிகரித்துள்ளது.
கடந்த சில நாட்களாக விவசாயிகள் சாமந்தி மற்றும் செண்டுமல்லி மற்றும் பன்னீர் ரோஜா மற்றும் பட்டன் ரோஸ் பூக்களை அதிகளவில் சாகுபடி செய்து வந்தனர். தற்போது பட்டன் ரோஸ் செடிகள் நன்றாக செழித்து வளர, நிலத்தை கொத்தி விடும் (கவாத்து) பணிகளில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். ராயக்கோட்டை அடுத்த தொட்டமெட்டரை கிராம பகுதியில், பட்டன் ரோஜா பூதோட்டங்களை விவசாயிகள் வளர்த்து வருகின்றனர்.
செடிகள் நன்றாக வளர்ந்து வரும் நிலையில், அடர்த்தியாக வளரவும், செடிகளுக்கு தண்ணீர் இறங்கவும், நிலத்தை கொத்தி விடும் பணியை தொழிலாளர்கள் செய்து வருகின்றனர்.இது குறித்து விவசாயிகள் கூறுகையில், `கடந்த ஒரு வாரமாக கால நிலை மாறுபட்டுள்ளது.
இதனால், நாங்கள் விவசாய நிலங்களில் பராமரிப்பு பணிகளில் கவனம் செலுத்தி வருகிறோம். இதில் பட்டன் ரோஜா தோட்டங்களில், செடிகள் நன்றாக வளரும் வகையில், அனைத்து தோட்டங்களில் நிலத்தை கொத்தி விடும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். இதன் மூலம் செடிகள் நன்றாக வளர்ந்து பூக்கள் சாகுபடி அதிகரிக்கும்,’ என்றனர்.
