*நோயாளிகளிடம் கலெக்டர் கேட்டறிந்தார்
ஆம்பூர் : ஆம்பூர் அருகே ‘உங்களை தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தில் துணை சுகாதார நிலையத்தை ஆய்வு செய்த கலெக்டர், மருத்துவ சேவையில் குறைபாடு உள்ளதா? என நோயாளிகளிடம் கேட்டறிந்தார். தமிழ்நாடு அரசின் சிறப்பு திட்டமான ‘உங்களை தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ் நேற்று காலை திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் ரவிகுமார் ஆய்வு மேற்கொண்டார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் மாதனூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஆம்பூர் அடுத்த வடசேரி ஊராட்சியில் ஆய்வு மேற்கொண்ட அவர் அங்குள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்திற்கு சென்றார். அங்கிருந்த அதிகாரிகளிடம் கடன் சங்க செயல்பாடுகள் குறித்து ஆலோசித்தார். மேலும் விவசாய கடன் பதிவேடு, நகை கடன் அடகு பதிவேடு, சிட்டா பதிவேடு, பொது பதிவேடு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார்.
பின்னர், ஊராட்சி மன்ற அலுவகத்திற்கு வந்த கலெக்டர் அங்குள்ள புதிய கட்டிடத்தை பார்வையிட்டார். தொடர்ந்து ஊராட்சி அலுவலகத்தின் வாயிலாக தற்போது அந்த ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து கேட்டறிந்தார். ஊராட்சி அலுவலகத்தில் தொழில்வரி ரசீது புத்தகம், சிட்டா வரவு, வருகை பதிவேடு, ரொக்க புத்தக பதிவேடு, பிடித்தம் பதிவேடு ஆகியவற்றை பார்வையிட்டார்.
பின்னர், அருகில் உள்ள துணை சுகாதார நிலையம் சென்ற கலெக்டர் ரவிகுமார், அங்கு பணியில் இருந்த இரு செவிலியர்களிடம் அங்கு வரும் நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து ஆலோசித்தார்.
மேலும், நோயாளிகள் பதிவேடு, மருந்து இருப்பு பதிவேடு, ஊசி செலுத்துதல் ஆகியவற்றை பார்வையிட்டார். பின்னர், அங்கு சிகிச்சைக்கு வந்த நோயாளிகளிடம் அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சேவைகள், மருத்துவ உதவி ஆகியவற்றை குறித்தும் அதில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா? என கேட்டார்.
தொடர்ந்து அதே ஊராட்சியில் செயல்பட்டு வரும் ஊர்ப்புற நூலகத்திற்கு சென்றார். அங்குள்ள சிறுவர் பிரிவு, இலக்கியம், அறிவியல் உள்ளிட்ட பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த புத்தகங்களை பார்வையிட்டார். மேலும் புரவலர் பதிவேடு, மாணவர் பதிவேடு, உறுப்பினர்கள் எண்ணிக்கை ஆகியவை குறித்து கேட்டறிந்தார். அதே பகுதியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடிக்கு சென்ற கலெக்டர், அங்கு மாணவர்களுக்கு வழங்கப்பட இருந்த முட்டைகளை பார்வையிட்டு உரிய தரத்தில் உள்ளதா? என ஆய்வு செய்தார்.
உரிய வகையில் அங்கன்வாடி குழந்தைகளை பராமரிக்க பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.இந்த ஆய்வின்போது சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை ஆட்சியர் பூஷணகுமார், தாசில்தார் ரேவதி, வட்டார வளர்ச்சி அலுவலர் மகராசி, துணை பிடிஓ தேவகுமார் உட்பட பல்வேறு துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
ரூ.47.91 லட்சம் நலத்திட்ட உதவி
உங்களை தேடி உங்கள் ஊரில் நிகழ்ச்சியில் பங்கேற்ற கலெக்டர் ரவிகுமார், தொடர்ந்து ஆம்பூர் பைபாஸ் சாலையில் நடந்த நிகழ்ச்சி கலந்துகொண்டார். அப்போது வட்டவழங்கல்துறை, தொழிலாளர் நல மையம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்டவை சார்பில் பயனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இதில் 209 பயனாளிகளுக்கு ரூ.47 லட்சத்து 91 ஆயிரத்து 400 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
