*சீரமைக்க பெற்றோர்கள் கோரிக்கை
கலசப்பாக்கம் : கலசப்பாக்கம் அருகே அரசு தொடக்கப்பள்ளியில் குடிநீர் மோட்டார் பழுதால் தண்ணீரின்றி மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். இதனை சீரமைக்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கலசப்பாக்கம் ஒன்றியம் மேலாரணி ஊராட்சி மேல்தாக்கல் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்களுக்கு ஆழ்துளை கிணறு அமைத்து, குடிநீர் டேங்க் முலம் தண்ணீர் வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு மின் மோட்டார் பழதானது. இதனால், குடிநீர் சப்ளை செய்வது தடை பட்டதால், மாணவ, மாணவிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் சமையல் செய்ய தண்ணீரின்றி வெளியே சென்று எடுத்து வர வேண்டி உள்ளது. கழிவறையில் தண்ணீர் இல்லாததால் மாணவ, மாணவிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
தற்போது கோடை வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், பள்ளி மாணவர்களுக்கு குடிநீர் தேவை அதிகரித்துள்ளது. எனவே மாணவர்களின் நலன் கருதி, மின் மோட்டாரை சீரமைத்து சீரான குடிநீர் வழங்க வேண்டும் என்று கல்வித்துறை அதிகாரிகள், ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகளிடம் ஏற்கனவே கடிதம் அளித்துள்ளனர்.எனவே சீரான குடிநீர் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்துள்ளனர்.
