ஜனநாயகன் படம் வெளியீடு முதல்வர், அமைச்சர்கள் வராததால் வெறிச்சோடிய தலைமை செயலகம்: அலுவல் பணிகள் ஒத்திவைப்பு

சென்னை: ஜனநாயகன் படம் வெளியானதையொட்டி முதல்வர் விஜய், அமைச்சர்கள் வராததால் தலைமைச் செயலகம் வெறிச்சோடி காணப்பட்டது. தமிழக முதல்வரும், தவெக தலைவருமான விஜய் நடித்துள்ள அவரது கடைசி திரைப்படமான ‘ஜனநாயகன்’ நேற்று தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. அதிகாலை முதலே ரசிகர்கள் உற்சாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு, பல்வேறு திரையரங்குகளில் சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டதால் திரையரங்குகள் திருவிழா கோலமாக காட்சியளித்தன.

படத்தின் வெளியீட்டை முன்னிட்டு தமிழக அரசின் நிர்வாக நடவடிக்கைகளிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. நேற்று நடைபெறவிருந்த பட்ஜெட் தொடர்பான பல்வேறு துறை ரீதியான ஆய்வுக் கூட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அமைச்சர்கள் திரையரங்குகளுக்குச் சென்று ‘ஜனநாயகன்’ திரைப்படத்தைப் பார்த்து ரசித்தனர். ரசிகர்களுடன் இணைந்து திரைப்படத்தை கண்டுகளித்த அவர்கள், அதுதொடர்பான புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்து, படக்குழுவுக்கும் முதலமைச்சருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, ஒவ்வொரு நாளும் தலைமைச் செயலகத்துக்கு நேரில் வந்து அரசு அலுவல்களை ஆய்வு செய்து, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, மக்கள் நலத் திட்டங்கள் தொடர்பான கோப்புகளில் முடிவெடுக்கும் பணிகளில் ஈடுபட்டு வரும் முதல்வர் விஜய், நேற்று திரைப்பட வெளியீட்டு நாளையொட்டி தலைமைச் செயலகத்துக்கு வரவில்லை. முதல்வர் வராததுடன், அவருடன் பல அமைச்சர்களும் நேற்று தலைமைச் செயலகத்தில் நடைபெறும் வழக்கமான அலுவல் பணிகளில் பங்கேற்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக, பொதுமக்கள், அதிகாரிகள், அமைச்சர்கள் மற்றும் பல்வேறு துறை அலுவலர்களின் வருகையால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் தலைமைச் செயலக வளாகம், நேற்று வழக்கத்திற்கு மாறாக அமைதியான சூழலில் காணப்பட்டது. பொதுவாக காலை நேரம் முதலே அமைச்சர்கள் வருகை, அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டங்கள், கோப்புகள் தொடர்பான ஆய்வுகள், பொதுமக்களின் மனுக்கள் பெறுதல் உள்ளிட்ட பணிகளால் தலைமைச் செயலக வளாகம் பரபரப்பாக இயங்கும்.

ஆனால் நேற்று அந்த பரபரப்பு பெருமளவில் குறைந்திருந்ததாக அங்கு வந்தவர்கள் தெரிவித்தனர். அமைச்சர்களின் வாகன அணிவகுப்புகள், அதிகாரிகளின் தொடர்ச்சியான வருகை, பொதுமக்களின் நடமாட்டம் உள்ளிட்டவை மிகவும் குறைவாக இருந்ததால், தலைமைச் செயலக வளாகம் வெறிச்சோடிய தோற்றத்தை அளித்தது.

பல அலுவலகங்களில் வழக்கமான பணிகள் நடைபெற்றாலும், உயர்மட்ட அரசியல் மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் குறைவாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், தினசரி பரபரப்புக்கு பெயர் பெற்ற தலைமைச் செயலகம், நேற்று மட்டும் வழக்கத்திற்கு மாறாக அமைதியான சூழலுடன் காணப்பட்டதாக அங்கு பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தெரிவித்தனர்.

Related Stories: