நீட் தேர்வுக்கு எதிராக தமிழ் திரையுலகம் போராட்டம்

சென்னை: நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக டெல்லி ஜந்தர் மந்தரில் காக்ரோச் ஜனதா கட்சி மற்றும் பல்வேறு மாணவர் அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், தமிழ் திரையுலகை சேர்ந்த இயக்குனர்கள் வெற்றிமாறன், அமீர், பா.ரஞ்சித் தலைமையில் சென்னையில் நேற்று போராட்டம் நடந்தது.

நீலம் பண்பாட்டு மையம், நீலம் மாணவர் இயக்கம் சார்பில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகர்கள் சத்யராஜ், மன்சூர் அலிகான், கலையரசன், இயக்குனர் லெனின் பாரதி, பாடகர் அறிவு, இசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், நடிகை ஆண்ட்ரியா உள்பட திரையுலகை சேர்ந்த பலர் கலந்துகொண்டனர். அப்போது அவர்கள், நீட் தேர்வுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர்.

வெற்றிமாறன் பேசுகையில், ‘ஒரு நாட்டில் மாணவர்கள் போராட்டத்துக்கு வந்துவிட்டார்கள் என்றால், அந்நாட்டில் மற்ற அமைப்புகள் சரியாக செயல்படவில்லை என்று அர்த்தம். மாணவர் போராட்டம் என்பது அரசின் தோல்வி. காக்ரோச் ஜனதா கட்சியின் போராட்டம், ஒன்றிய அரசின் தோல்வி. அவர்களின் போராட்டம் நீட் தேர்வு ரத்துக்கானதாக மாற வேண்டும். நீட் தேர்வு ரத்து குறித்து தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கிறோம்.

நீட் தேர்வை ஒழிக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும்’ என்றார். மலையாள நடிகர் மம்மூட்டி, இயக்குனர் மாரி செல்வராஜ், நடிகை வரலட்சுமி உள்பட பலர் தங்கள் சோஷியல் மீடியா மூலம் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து இருந்தனர். ஏற்கனவே நடிகர் பிரகாஷ்ராஜ் மாணவர்களுக்கு ஆதரவாக போராட்ட களத்தில் குதித்தார். இந்தி நடிகர்கள் சல்மான்கான், சோனு சூட் உள்பட பலர் தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

சல்மான்கான் வெளியிட்டுள்ள பதிவில், ‘நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பேன் என்று பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார். எனவே, மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு வீட்டுக்கு செல்ல வேண்டும். சோனம் வாங்சுக் தனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் எனது வீட்டில் இருந்து அவருக்கு உணவு அனுப்பி வைக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: