தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் அருணா ஜெகதீசன் கமிஷன் அறிக்கையை அரசு ஏற்றதா? ஐகோர்ட் கிளை கேள்வி

மதுரை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் அருணா ஜெகதீசன் கமிஷன் அறிக்கையை அரசு ஏற்றுக்கொண்டதா, இல்லையா என ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. மதுரையை சேர்ந்த கதிரேசன் உள்பட 20 பேர், ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு: கடந்த 22.05.2018 அன்று ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது, சீருடை மற்றும் சீருடை அணியாத காவல்துறையினர் கல்வீச்சு நடத்தி, தடியடி நடத்தியதுடன், பேரணியைக் கலைக்க நேரடியாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

சீருடை அணியாத காவல்துறையினர் மற்றும் சிறப்புப்பயிற்சி பெற்ற வீரர்களைக் கொண்டு, போராட்டத்தை முன்னெடுத்த முக்கிய நபர்களின் தலை, மார்பு மற்றும் வாயை குறிவைத்து ஸ்னைப்பர் ரக நவீன துப்பாக்கிகளால் சுட்டுக் கொன்றுள்ளனர். 11க்கும் மேற்பட்டோரைக் சுட்டுக் கொன்றதற்கு காரணமான டிஐஜி கபில்குமார் சரட்கர், எஸ்பி மகேந்திரன் மற்றும் ஆட்சியர் வெங்கடேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் மீது ஐபிசி 302ன் கீழ் வழக்குப்பதிவு செய்ய மாநில டிஜிபிக்கு உத்தரவிட வேண்டும்.

இச்சம்பவம் தொடர்பாக உயர்நீதிமன்ற நீதிபதி தலைமயில் நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும். மேலும், துப்பாக்கிச்சூடு தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும். விசாரணை முடியும் வரை சம்பந்தப்பட்ட 3 அதிகாரிகளும் அரசுப்பணிகளைத் தொடர இடைக்காலத்தடை விதிக்க வேண்டும். சிசிடிவி காட்சிகளை நீதிமன்றத்தில் ஒப்படைக்க ஆணையிட வேண்டும். இவ்வாறு கோரியிருந்தனர். இந்த மனுக்கள் நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், சக்திவேல் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இன்ஸ்பெக்டர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து விசாரித்து வருகிறோம் என தெரிவித்தார். மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஏ.கண்ணன் ஆஜராகி, ‘‘இந்த வழக்கில் ஒரேயொரு போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது மட்டும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து இருப்பது ஏற்புடையதல்ல. சிபிஐயின் இந்த நடவடிக்கைக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது’’ என்றார்.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: சம்பவம் தொடர்பாக விசாரித்த நீதிபதி அருணா ஜெகதீசன் கமிஷன் அறிக்கையை தமிழக அரசு ஏற்றுக்கொண்டதா, இல்லையா? அப்போதைய கலெக்டர், 3 தாசில்தார்கள் உள்ளிட்ட சில உயரதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கமிஷன் பரிந்துரைத்தது. அதன் மீது அரசின் நிலைப்பாடு என்ன? பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினருக்கு அரசு ஏற்கனவே ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்கியுள்ளது. மீதி ரூ.20 லட்சம் இழப்பீடு எப்போது வழங்கப்படும் என்பது குறித்து தமிழக அரசு தரப்பில் ஆக.13ல் தெளிவுபடுத்த வேண்டும்.  இவ்வாறு உத்தரவிட்டனர்.

Related Stories: