சென்னை: முதல்வர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் நேற்று தியேட்டர்களில் ரிலீஸ் ஆனது. படத்தை தவெக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், ரசிகர்கள் திரண்டு சென்று பார்த்தனர். சென்னை கோயம்பேடு தியேட்டரில் அமைச்சர்கள் புஸ்ஸி ஆனந்த், அருண்ராஜ் ஆகியோர் பார்த்தனர். அப்போது அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் விட்டு அழுதார். புதுக்கோட்டை மேலராஜ வீதியில் உள்ள திரையரங்கில் அமைச்சர் முகமது பர்வேஸ், ஜனநாயகன் திரைப்படத்தை பார்த்தார்.
இதற்காக காவல்துறை பாதுகாப்போடு தேசியக்கொடி பொருத்தப்பட்ட அரசு வாகனத்தில் திரையரங்குக்கு வந்தார். அப்போது சுற்றிவர கேமராவில் அவரை படம் பிடித்தனர். இதனால் கண்ணீர் விட்டு அழுது கொண்டே திரைப்படத்தை பார்வையிட்டார். கோவை தியேட்டரில் அமைச்சர் சம்பத்குமார், போத்தனூர் தியேட்டரில் அமைச்சர் விக்னேஷ் ரசிகர்களுடன் சேர்ந்து படம் பார்த்தனர். அமைச்சர் விக்னேஷ் படம் பார்த்த தியேட்டரில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
அமைச்சர் விக்னேஷ் விசிலடித்து படம் பார்க்க காவல்துறை பாதுகாப்பு அளித்து வருவதாக நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். தவிர, தியேட்டருக்கு வந்த அமைச்சர் விக்னேஷ் அரசு வாகனத்தில், காரில் தேசிய கொடி கட்டியபடி வந்தது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. படத்தை பார்த்த அமைச்சர்கள் சம்பத் குமார், விக்னேஷ் ஆகியோர் தியேட்டரில் அமர்ந்து கண்ணீர் விட்டு அழுதனர். ஈரோட்டில் உள்ள ஒரு தியேட்டரில் படம் பார்க்க வந்த அமைச்சர் விஜய் பாலாஜி, அங்கு இருந்த விஜய் கட்அவுட்டை தொட்டு வணங்கி கண்ணீர் விட்டு அழுதார்.
இதேபோல் தியேட்டரில் படம் பார்த்த கரூர் தவெக மாவட்ட செயலாளர் மதியழகன், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் கண்ணீர் விட்டு அழுதனர். எம்எல்ஏ குத்தாட்டம்: ஈரோடு மாவட்டம் சிவகிரியில் உள்ள திரையரங்கில் படம் பார்க்க வந்த மொடக்குறிச்சி எம்எல்ஏ சண்முகன் மற்றும் தவெக நிர்வாகிகள் இனிப்பு வழங்கினர். அப்போது, தியேட்டர் முன்பு விஜய் நடித்த சச்சின் படத்தில் இருந்து “வாடி… வாடி…. வாடி… வாடி கைப்படாத சிடி” என்ற பாட்டுக்கு எம்எல்ஏ சண்முகன் ரசிகர்கள் மற்றும் நிர்வாகிகள் முன்னிலையில் குத்தாட்டம் போட்டார்.
செங்கோட்டையன் வழங்கிய டிக்கெட்: ஈரோடு மாவட்டம் அந்தியூரில் உள்ள திரையரங்கில் மூன்று ஸ்கிரீன்களுக்கான ஒட்டுமொத்த டிக்கெட்டுகளை வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன், தவெக ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளர் விஜய் வெங்கடேஷிடம் வாங்கி கொடுத்ததாக கூறப்படுகிறது. அதில் செங்கோட்டையன் வழங்கிய இலவச டிக்கெட் என்று எழுதப்பட்டு இருந்தது. இந்த டிக்கெட்டுகள் ரசிகர்களுக்கு வழங்கப்பட்டது.
