முன்நிபந்தனைகளை விதித்து நீட் விவாதத்தில் இருந்து எதிர்க்கட்சிகள் தப்பிக்க முயற்சி: ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜூ குற்றச்சாட்டு

புதுடெல்லி: நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்த விவாதத்தில் பங்கேற்காமல் முன்நிபந்தனைகளை விதித்து எதிர்க்கட்சிகள் அதில் இருந்து தப்பிக்க முயற்சிப்பதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ குற்றம்சாட்டியுள்ளார். நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில் நேற்று மக்களவை ஒத்திவைக்கப்பட்டு பிற்பகல் மீண்டும் கூடியபோது நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக மீண்டும் அமளி ஏற்பட்டது. அப்போது அவையில் பேசிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, ‘‘நீட் வினாத்தாள் கசிவு குறித்த விவாதத்தின்போது இந்த விவகாரம் குறித்த அரசின் நிலைப்பாட்டையும் முன்வைக்க விரும்புகின்றது.

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் விவாதத்தின்போது பேசலாம். விவாதம் இரண்டு நாட்கள் கூட நடைபெறலாம். மேலும் இரு அவைகளிலும் விவாதத்திற்கான தேதி மற்றும் கால அளவை எதிர்க்கட்சிகளே முடிவு செய்யலாம். இந்த விவாதத்தை நடத்துவது தொடர்பாக காங்கிரஸ் மற்றும் பிற எதிர்க்கட்சிகளை அரசு அணுகியுள்ளது. ஆனால் முன்நிபந்தனைகளை விதித்து எதிர்க்கட்சிகள் விவாதத்தில் இருந்து தப்பிக்க முயற்சிக்கின்றன” என்றார்.

* காங்கிரஸ் பின்வாங்குகிறது
டெல்லியில் செய்தியாளர்களிடம் பாஜ தலைவர் நிதின் நபின் கூறுகையில், ‘‘மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் எதிர்காலம் குறித்து அனைத்து மட்டங்களிலும் விவாதங்களை நடத்துவதற்கு தேசிய ஜனநாயக கூட்டணி அரசு முழுமையாக தயாராக உள்ளது. ஆனால் ராகுல்காந்தி, காங்கிரஸ் மற்றும் ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் விவாதத்தில் இருந்து பின்வாங்குகின்றன. ஏனெனில் நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு வந்தால் தங்களது இரட்டை வேடம் அம்பலமாகிவிடும் என்பது அவர்களுக்குத் தெரியும்” என்றார்.

Related Stories: