திருவனந்தபுரம்: கேரள முதல்வராக பினராயி விஜயன் இருந்த போது கடந்த இரு வருடங்களுக்கு முன்பு மக்கள் குறையை கேட்க சொகுசு பஸ்சில் சென்ற போது காங்கிரசார் மறியல் செய்தனர். அப்போது பினராயி விஜயனின் மெய்க்காப்பாளர்கள் காரிலிருந்து இறங்கி காங்கிரஸ் தொண்டர்களை சரமாரியாக லத்தியால் தாக்கினர். இதில் 4 பேர் படுகாயமடைந்தனர்.
இதுதொடர்பான விசாரணை அறிக்கையில், பினராயி விஜயனின் மெய்காப்பாளர்கள் தாக்குதல் நடத்தியது தவறு என்றும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அப்போது சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக இருந்த அஜித்குமார், அந்த விசாரணை அறிக்கையில் பினராயி விஜயனின் மெய்க்காப்பாளர்கள் எந்தத் தவறும் செய்யவில்லை என்று திருத்தினார்.
இந்நிலையில் கேரளத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பின்னர் பினராயி விஜயனின் மெய்காப்பாளர்கள் அனைவரும் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மேலும் விசாரணை அறிக்கையை திருத்திய ஏடிஜிபி அஜித்குமார் மீது துறை ரீதியான விசாரணை நடத்த கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னித்தலா உத்தரவிட்டார்.
இந்த அறிக்கை அடிப்படையில் ஏடிஜிபி அஜித்குமாரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னித்தலா முதல்வர் வி.டி. சதீசனுக்கு சிபாரிசு செய்தார். அதை முதல்வர் வி.டி. சதீசன் அங்கீகரித்ததை தொடர்ந்து ஏடிஜிபி அஜித்குமார் நேற்று பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அஜித்குமாருக்கு வரும் 31ம் தேதி டிஜிபியாக பதவி உயர்வு வருவதாக இருந்தது. இந்நிலையில் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
