மாணவர்களை கைது செய்து ஏற்றிய போலீஸ் வேன் முன்நின்று வழிமறித்த மாடல் அழகி: இன்டர்நெட்டில் வைரல்

மும்பை: மும்பை மாணவர்கள் போராட்டத்தில் அவர்களை கைது செய்து ஏற்றிச்சென்ற வேனை மாடல் அழகி ரியா அஹிர் தனியாக வழிமறித்தது பெரும் வைரலாக மாறி உள்ளது. பிரபல மாடல் அழகி ரியா அஹிர். மும்பையில் நடந்த நீட் போராட்ட இடத்துக்கு சென்ற இவர் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்தார். மேலும் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி நடந்த போராட்டத்தில் ​​கைது செய்யப்பட்ட மாணவர் குழுவை ஏற்றிச் சென்ற போலீஸ் வேனை ரியா அஹிர் மும்பையில் வழிமறித்தார்.

இந்த நடவடிக்கையின் போது போலீசார் அவரை அப்புறப்படுத்த முயன்ற போது தனியாளாக எதிர்த்து நின்ற மாடல் அழகி அங்கிருந்து நகர மறுத்தார். அவரது இந்த எதிர்ப்பு நடவடிக்கை, மும்பையின் தாதர் பகுதியில் உள்ள சிவாஜி பூங்காவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போராட்டக்காரர்கள் விடுவிக்கப்பட வழிவகுத்தது. இதுகுறித்து அவர் கூறுகையில்,’ நான் போராட்டத்தில் கலந்துகொள்ளச் சென்றிருந்தேன், என் நண்பர்களுக்காகக் காத்திருந்தேன். அப்போது கைதான மாணவர்கள் நிரம்பியிருந்த போலீஸ் வேன் ஒன்றை நான் பார்த்தேன்.

கைது செய்வதற்கான ஆணை அவர்களிடம் உள்ளதா என்று நான் போலீசாரிடம் கேட்டேன். ஆனால் அவர்களிடம் பதில் இல்லை. போலீசார் தவறு செய்கிறார்கள் என்பது எனக்குத் தெரிந்திருந்ததால் வேன் மீது கைவைத்தபடி வழிமறித்த நான் உறுதியாக நின்றுகொண்டு ‘இன்குலாப் ஜிந்தாபாத்’ (புரட்சி ஓங்குக) முழக்கங்களை எழுப்பினேன். அத்துடன் ‘தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்’ என்றும் முழக்கமிட்டேன். ஒரு குடிமகளாக எனது உரிமையையும், சக குடிமக்களுக்குப் பொறுப்புள்ள ஒரு நபராக எனது கடமையையும் மட்டுமே நான் நிறைவேற்றினேன்’ என்றார்.

Related Stories: