புதுடெல்லி: ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் நடத்திய போராட்டங்களால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நேற்றும் முடங்கியது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்து இரு அவைகளும் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வருகின்றது. மக்களவை நான்காவது நாளாக நேற்று கூடியது. நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் மற்றும் ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன.
இதனால் மக்களவை நடவடிக்கைகள் நான்காவது நாளாக நேற்றும் பாதிக்கப்பட்டது. எதிர்க்கட்சிகள் அமளியால் அவை பல முறை ஒத்திவைக்கப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டது. பிற்பகல் இரண்டு மணிக்கு அவை கூடியபோதும் எதிர்க்கட்சி எம்பிக்கள் மீண்டும் முழக்கங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். அவைக்கு தலைமை தாங்கிய திலீப் சைகியா, போராட்டத்தில் ஈடுபட்ட உறுப்பினர்களை அவையின் கண்ணியத்தை காக்குமாறு கேட்டுக்கொண்டதுடன் அவை நடவடிக்கைக்கு இடையூறு விளைவிப்பது சரியல்ல என்றும் தெரிவித்தார்.
எனினும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பதாகைகளை ஏந்தி அவையின் மையப்பகுதிக்கு வந்து முழக்கங்களை எழுப்பினார்கள். இதன் காரணமாக அவை நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவையிலும் இதே நிலை நீடித்தது. காலை 11மணிக்கு அவை கூடிய சில நிமிடங்களிலேயே முதலில் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. 12 மணிக்கு அவை மீண்டும் கூடியதும், அமைச்சர் பிரதான் பதவி விலகுவது குறித்து அரசிடம் இருந்து அறிக்கை வேண்டும் என்று மல்லிகார்ஜூன கார்கே வலியுறுத்தினார்.
பின்னர் அவை 2 மணி வரையிலும் ஒத்திவைக்கப்பட்டது. பிற்பகல் 2மணிக்கு அவை கூடியபோதும் முட்டுக்கட்டை நீடித்ததால் அவை 3 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. 3 மணிக்கு அவை கூடியபோது கார்கே உட்பட எதிர்க்கட்சி எம்பிக்கள் இருக்கையில் இருந்து எழுந்து நின்று அமைச்சர் பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினார்கள். அவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் இன்று நான்காவது நாள், நாம் குறைந்தபட்சம் மசோதா மீதாவது விவாதிக்க வேண்டும் அவையை செயல்பட விடுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.
எனினும் அமளி நீடித்ததால் அவர் அவையை நாளை வரை ஒத்திவைத்து உத்தரவிட்டார். இதனிடையே உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவை நேற்று சந்தித்துப்பேசினார். முன்னதாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி மற்றும் சமாஜ்வாதி எம்பி அகிலேஷ் யாதவ் ஆகியோர் சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்தித்தனர். திரிணாமுல் எம்பி சவுகதா ராய் மற்றும் மஹூவா மொய்த்ரா ஆகியோரும் உடன் இருந்தனர்.
* மக்களவையில் காங். உரிமை மீறல் நோட்டீஸ்
பிரதமர் மோடியின் இல்லத்திற்கு வெளியே நடந்த போராட்டத்தின்போது எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி மற்றும் பெண் எம்பிக்களின் நாடாளுமன்ற உரிமைகள் மற்றும் சிறப்புரிமைகள் மீறப்பட்டதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. இதனை தொடர்ந்து காங்கிரஸ் எம்பி ஹிபி ஏதென் மக்களவையில் அதிகார உரிமை மீறல் தீர்மானத்தை கொண்டு வருவதற்கான நோட்டீசை தாக்கல் செய்தார்.
மக்களவை பொதுச்செயலருக்கு எழுதிய கடிதத்தில் போராட்டம் அமைதியான முறையில் நடைபெற்ற போதிலும், காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட எம்பிக்களையும் குறிப்பாக ராகுல்காந்தியையும் மிகக் கடுமையாக கையாண்டுள்ளனர். நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் காவல்துறையினரால் இழுத்துச்செல்லப்பட்டு கட்டாயமாக சத்ராசல் மைதானத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டது துரதிஷ்டவசமானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
* எதிர்க்கட்சிகள் – ஆளும்கட்சி எம்பிக்கள் மோதல்
நாடாளுமன்றத்துக்கு வெளியே நேற்று காலை எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் ஆளும் கட்சி எம்பிக்கள் ஒருவருக்கொருவர் எதிராக முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்றத்தின் வாயிலுக்கு வெளியே நின்று வினாத்தாள் கசிவு விவகாரத்தை அரசியல் ஆக்குவதாக எதிர்க்கட்சியை குற்றம்சாட்டி ஆளும் கட்சி எம்பிக்களும், எதிர்க்கட்சி எம்பிக்கள் அமைச்சர் பிரதான் பதவி விலக வேண்டும் என்றும் கூறி முழக்கமிட்டனர்.
