மனமகிழ் மன்றங்களில் மது விற்பனை விதிமீறல்: அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

மதுரை: தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் மனமகிழ் மன்றங்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்து, வருவாய்த் துறை, காவல் துறை மற்றும் மதுவிலக்குத் துறை ஆகிய மூன்று துறைகளும் இணைந்து கூட்டு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. இந்த விசாரணையின் போது, மனமகிழ் மன்றங்கள் என்ற பெயரில் நடைபெறும் விதிமீறல்கள் குறித்து நீதிபதிகள் பல்வேறு கேள்விகளை முன்வைத்தனர்.

மனமகிழ் மன்றங்களின் விதிகளின்படி, அங்குப் பதிவு செய்த உறுப்பினர்களுக்கு மட்டுமே சேவைகள் வழங்கப்பட வேண்டும். ஆனால், உறுப்பினர் அல்லாத பொதுமக்களுக்கு எவ்வாறு சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுகிறது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மனமகிழ் மன்றங்கள் என்ற பெயரில் உரிமம் பெற்றுவிட்டு, அங்குச் சட்டம் குறிப்பிடும் எவ்வித விளையாட்டு அல்லது பொழுதுபோக்கு அம்சங்களும் இன்றி. அவை வெறும் நாள் முழுதும் செயல்படும் மதுக்கடைகளாகவே நடத்தப்பட்டு வருவதாக நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.

இதையடுத்து வருவாய்த் துறை, காவல் துறை, மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை ஆகிய மூன்று துறைகளின் அதிகாரிகளும் இணைந்து, மாநிலம் முழுவதும் செயல்படும் மனமகிழ் மன்றங்களில் நேரடி ஆய்வு நடத்த வேண்டும். ஆய்வு அறிக்கையை உயர் நீதிமன்றத்தில் கூட்டு அறிக்கையாக உடனடியாகத் தாக்கல் செய்ய வேண்டும். விதிமுறைகளை மீறி, உறுப்பினர் அல்லாத வெளிநபர்களுக்கு மது விற்பனை செய்வது உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட மனமகிழ் மன்றங்களின் எஃப்.எல்-2 உரிமத்தை உடனடியாக ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: