சென்னை : ஜனநாயகன் படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்த்த அமைச்சர் அருண்ராஜ் அளித்த திரைப்படம் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் அதில் தலைவரின் கடைசி படம் என்பது தலைவருக்கு மட்டுமல்ல, ரசிகர்களுக்கு மட்டுமல்ல; அனைவருக்குமே மிகவும் உணர்வுபூர்வமான ஒரு தருணம். 30 ஆண்டுகளுக்கும் மேலாக நேசித்து, அர்ப்பணிப்புடன் பணியாற்றிய ஒரு துறையை விட்டுவிட்டு வருவது எவ்வளவு பெரிய உணர்வாக இருக்கும் என்பதை அனைவராலும் முழுமையாக உணர முடியாது. அதனால்தான் மக்கள் இந்த அளவுக்கு அன்பை வெளிப்படுத்துகிறார்கள்.
பிறகு தலைவர் எந்த வேலையை எடுத்துக்கொண்டாலும், அதை முழு நேர்மையுடனும், முழு மனதுடனும் செய்ய வேண்டும் என்று நினைப்பவர். அதனால்தான் அரசியலுக்கு வரும்போது, “நான் உயிருக்கு உயிராக நேசித்த சினிமாவை விட்டுவிட்டு வருகிறேன்” என்று கூறினார். அதற்குக் காரணம், அரசியலில் முழு அர்ப்பணிப்புடனும், முழு சிந்தனையுடனும் செயல்பட வேண்டும் என்ற அவருடைய உறுதியே.
சினிமாவில் எந்த அளவுக்கு அர்ப்பணிப்பு, ஒழுக்கம் (Discipline), மற்றும் அர்ப்பணிப்பான உழைப்பைக் காட்டினாரோ, அதே அளவுக்கு அரசியலிலும் காட்டுவார் என்ற நம்பிக்கை மக்களிடம் இருக்கிறது. வெளிப்படையான நிர்வாகமும், ஊழலற்ற ஆட்சியும் வழங்க வேண்டும் என்பதே அவருடைய நோக்கம்.
இந்தப் படத்தில் ஒரு சிறிய காட்சியில் நடித்த வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன். அந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய தலைவருக்கு இந்த நேரத்தில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்தப் படம் இணையத்தில் கசிந்த (Leak) பிறகும், இவ்வளவு மழை பெய்த நிலையிலும் இத்தனை பெரிய கூட்டம் திரண்டிருப்பது, மக்கள் தலைவர் மீது வைத்திருக்கும் உண்மையான அன்புக்குச் சான்றாகும். அதுதான் தலைவரின் மீது மக்களுக்கு இருக்கும் உண்மையான பாசம்.
எம்.ஜி.ஆர். இருந்த காலத்திலும் மக்கள் அவரை வெள்ளித்திரையில் பார்ப்பதையே மிகப்பெரிய மகிழ்ச்சியாகக் கருதினார்கள். அதேபோல், தலைவரின் இந்தப் படமும் மக்களுக்கு தீபாவளி, பொங்கல் போன்ற ஒரு பெரிய திருவிழாவாகவே அமைந்துள்ளது.
“இனி படம் வெளியாகாது”, “ஏழு மாதங்களுக்கு படம் வராது” என்று பலர் கூறினார்கள். ஆனால், அந்த கணிப்புகள் அனைத்தையும் பொய்யாக்கி, படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியையும் பெற்றுள்ளது.
இன்று மக்கள் மனதில் தலைவர் நீங்காத ஒரு இடத்தைப் பிடித்திருக்கிறார். அந்த இடத்தைத் தக்க வைத்துக்கொண்டு, என்றும் மக்கள் மனதில் நிலைத்திருப்பதே மிகப்பெரிய சாதனையாகும். அதுவே எங்களின் எண்ணமும், இலக்குமாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.
