தர்மபுரி ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகே, கிணற்றில் தள்ளி 3 குழந்தைகளை கொன்று இளம்பெண் தற்கொலை

தர்மபுரி: தர்மபுரி தடங்கம் அருகே உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் அருகில் வசித்து வருபவர் சரவணன். இவரது மனைவி அம்சா (35). இவர்களது குழந்தைகள் ஜீவிதா (16), நவீனா (6), குமரன் (3). இவர்களில் ஜீவிதா தர்மபுரி அவ்வையார் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். இந்நிலையில் சரவணனுக்கு மனைவி அம்சாவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால், அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது.

கடந்த 19ம் தேதி கணவன்-மனைவி இடையே மீண்டும் குடும்பத்தகராறு ஏற்பட்டது. இதனால் அம்சா கோபித்துக்கொண்டு குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேறினார். மீண்டும் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் அவர்கள் கிடைக்கவில்லை. நேற்று மாலை அப்பகுதியை சேர்ந்தவர், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் அருகேயுள்ள கிணற்றில் சடலங்கள் கிடப்பதாக, அதியமான்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

இதன்பேரில், இன்ஸ்பெக்டர் சஞ்சீவ்குமார் மற்றும் போலீசார் உடனடியாக சம்பவ இடம் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். இதில் கிணற்றில் சடலமாக கிடந்தது, கணவருடன் சண்டை போட்டுக்கொண்டு குழந்தைகளுடன் மாயமான அம்சா மற்றும் அவரது குழந்தைகள் என்பது தெரியவந்தது.

இதையடுத்து, தர்மபுரி தீயணைப்பு நிலைய அலுவலர் தலைமையில் சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்பு வீரர்கள், கிணற்றில் கிடந்த 4 பேரின் சடலத்தை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், கணவனுடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த அம்சா குழந்தைகளை கிணற்றில் தள்ளி கொலை செய்துவிட்டு, தானும் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதையடுத்து அம்சாவின் கணவனை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: