சென்னை: குடும்ப பிரச்னையில் அமைச்சர் மரிய வில்சன் மற்றும் சகோதரருக்கு இடையே சமரச பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்படாததால் மீண்டும் அமைச்சர் மரியவில்சன் ஆஜராக சென்னை உயர் நீதிமன்ற சமரச தீர்வு மையம் உத்தரவிட்டுள்ளது. தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன் கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் 8ம் தேதி புதுச்சேரி, எழில் நகரில் வசித்து வரும் அவரது சகோதரர் மரிய குலோத் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று மரிய குலோத், அவரது மனைவி கெரோலின் ஆகியோரை தாக்கியதாக லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.
புதுச்சேரி குற்றவியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்ய கோரி அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் மரிய வில்சன் அவரது சகோதரர் குடும்பத்தினர் சமரச தீர்வு மையத்தை அணுகி தீர்வு காண வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சமரச தீர்வு மைய நீதிபதி பாலசுப்பிரமணியம் முன்பு நேற்று 2வது முறையாக அமைச்சர் மரிய வில்சன், அவரின் சகோதரர் மரிய குலோத் ஆகியோர் நேரில் ஆஜராகி சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் சமரச பேச்சுவார்த்தையில் நேற்றும் தீர்வு எதுவும் எட்டப்படவில்லை. இதையடுத்து, மீண்டும் வரும் 28ம் தேதி அமைச்சர் மரிய வில்சன், அவரின் சகோதரர் ஆகியோர் நேரில் ஆஜராக சமரச தீர்வு மையம் உத்தரவிட்டு பேச்சுவார்த்தையை தள்ளிவைத்தது.
