சென்னை: பிரதமரோ, முதல்வரோ பேசும்போது வெளிநடப்பு செய்வது உலக அளவில் ஏற்றுக் கொண்ட ஜனநாயக வழிமுறை. அதை விடுத்து நான் பேசும் போது, கதவை பூட்டுவேன் என்பது சர்வாதிகாரம் என்று திமுக வர்த்தகர் அணி செயலாளர் காசி முத்துமாணிக்கம் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: பிரதமரோ, முதல்வரோ பேசும் போது வெளிநடப்பு செய்வது உலக அளவில் ஏற்றுக்கொண்ட ஜனநாயக வழிமுறை, அதை விடுத்து நான் பேசும்போது, கதவை பூட்டுவேன் என்பது சர்வாதிகாரம், சர்வாதிகாரத்தை எதிர்ப்பதற்கு அடையாளமாக உடைப்பேன் என்றால் கை உடைந்து விட்டதா? கொத்து பரோட்டா என்பது ஜனநாயக சொல்லா? தீ என்றால் நாக்கு சுட்டுவிடுமா? பூட்டினால் தானே, அதான் பூட்டவே இல்லையே. திருமணம் நடந்தால் நானே பிள்ளை குட்டி, கருத்தியலை கருத்துக் கொண்டு தானே எதிர்க்க வேண்டும்? எல்லாமே ஜெயலலிதா பாணியா? நாடு தாங்குமா?.
ஒரு காலத்தில் ஜெயலலிதா தான் மதுராந்தகம் சொக்கலிங்கம், தூத்துக்குடி ரமேஷ், ராணிப்பேட்டை மோகன் என தனது சொந்தக் கட்சி எம்.எல்.ஏ.,க்களையே குறிவைத்து தாக்கினார். அரசுக்கு எதிராக சென்றதால் வழக்கறிஞர் சண்முகசுந்தரம், வழக்கறிஞர் விஜயன் ஆகியோர் தாக்கப்பட்டார்கள். ஐ.ஏ.எஸ். சந்திரலேகா முகத்தில் ஆசிட் வீசப்பட்டது. அந்த வரிசையில் அனிதா ராதாகிருஷ்ணன், விளாத்திகுளம் மார்க்கண்டேயன் என விரிகிறது.
ஜெயலலிதா பாணியில் ஆட்சி நடத்த துடிக்கும் நீங்கள், அமைச்சரின் மனைவி, உதவியாளர் மனைவியுடன் நெருக்கம் என புகார் வந்தவுடன் அந்த அமைச்சரையே கோட்டையை விட்டு விரட்டினார் ஜெயலலிதா, சசிகலா புஷ்பா நடவடிக்கை தவறுக்காக சுட்சியை விட்டும் நீக்கினார் ஜெயலலிதா. ஆனால் ஒரு மாதமாகியும் தன்னை கெடுக்க அழைத்து வரச் சொன்னதே சரவணன் தான் எனச் சொல்லியும், இதுவரை சரவணன் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?.
அரசு வழக்கறிஞர் பதவிக்கு என்னிடம் ரூ.20 லட்சம் கேட்கிறார்கள் என த.வெ.க. நிர்வாகி ஞானசவுந்தரி சொல்லியும் என்ன நடவடிக்கை எடுத்தார்கள். ஜெயலலிதா மாதிரியே ஆண்டால், ஜெயலலிதா மாதிரியே சிறைக்கு போக வேண்டியது தான்.
முட்டாள் முதலமைச்சர் என பேசிய ஆறு மாதத்தில், யார் ரவுடி என்பது தெரியும் என்று மிரட்டிய ஆதவ் மீது, காவல்துறை தான் 41 பேர் இறந்ததற்கு காரணம் என்று சொன்ன விஜய் மீது, செந்தில் பாலாஜி பல்லை உடைப்பேன் நாக்கை அறுப்பேன் என்று சொன்ன அண்ணாமலை மீது முதல்வர் விஜய் நடவடிக்கை எடுப்பாரா?. பிடிக்கப்பட்ட வேண்டியவர்கள் வெளியே, பாராட்டுக்குரியவர்கள் உள்ளேயா? எத்தனை நாள் நீடிக்கும் இந்த ஆட்சி?. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
