* முக்கிய சாட்சிகளை தீர்த்துக்கட்ட பாளை சிறையில் பள்ளி தாளாளருடன் சேர்ந்து சதி திட்டம்; தமிழ்நாடு, கேரளாவுக்கு கூலிப்படை ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டது அம்பலம்
தாராபுரம்: தாராபுரத்தில் சென்னை ஐகோர்ட் வக்கீல் கொலை வழக்கில் முக்கிய சாட்சிகளை கூலிப்படை ஏவி கொல்ல முயன்றதாக நெல்லை கவின் ஆணவக் கொலை வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்த எஸ்.ஐ. கைது செய்யப்பட்டார். ஈரோடு மாவட்டம், தாராபுரத்தை சேர்ந்த சென்னை ஐேகார்ட் வழக்கறிஞர் எல்.முருகானந்தம் (41) என்பவர் சொத்து தகராறு காரணமாக முன்விரோதத்தில் கடந்த ஆண்டு ஜூலை 28ம் தேதி கூலிப்படையால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் முருகானந்தத்தின் சித்தப்பாவும், தாராபுரம் தனியார் பள்ளி தாளாளருமான தண்டபாணி, அவரது மகன் கார்த்தி, நண்பர் நாட்டுத்துரை மற்றும் கூலிப்படையினர் உள்ளிட்ட மொத்தம் 28 பேரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், கூலிப்படையை தயார் செய்து கொடுத்ததாக நெல்லையில் ஆணவக்கொலை செய்யப்பட்ட கவின் வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்து உள்ள எஸ்.ஐ சரவணனை நேற்று முன்தினம் நள்ளிரவில் நெல்லையில் தாராபுரம் போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது: திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த எஸ்.ஐ. தம்பதி சரவணன்-கிருஷ்ணகுமாரி. இவர்களது மகள் சுபாஷினி மென்பொறியாளரான கவின் என்பவரை காதலித்தார். இருவரும் வேறு வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், ஆத்திரமடைந்த எஸ்.ஐ. தம்பதியின் மகன் சுர்ஜித் கடந்த ஜூலை 27ம் தேதி திருநெல்வேலி மாவட்டம் கேடிசி நகரில் கவினை பேச்சுவார்த்தைக்கு அழைத்து வெட்டிக்கொலை செய்தார். இதுகுறித்து திருநெல்வேலி போலீசார் ஆணவக் கொலையாக வழக்குப்பதிந்து எஸ்.ஐ. தம்பதி மற்றும் அவரது மகனை கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.
சென்னை ஐகோர்ட் வக்கீல் கொலை செய்யப்பட்ட வழக்கில் கூலிப்படை உட்பட 28 பேர் கைது செய்யப்பட்டனர். ஆனால், கூலிப்படைக்கு பேசிய பணத்தை வழங்காததால் கோவை சிறைக்குள் அவர்களுக்கிடையே மோதல் ஏற்படவே, தண்டபாணி உட்பட சிலரை பாளையங்கோட்டை சிறைக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறைத்துறை இடம் மாற்றம் செய்தது. அப்போது, கவின் ஆணவக்கொலையில் ஜாமீன் கிடைக்காமல் சிறையில் இருந்த எஸ்.ஐ. சரவணனுக்கும், தண்டபாணிக்கும் நட்பு ஏற்பட்டது.
அப்போது, ‘‘தண்டபாணி தனது வழக்கில் முக்கிய சாட்சிகளாக வக்கீலின் தாய் சுமித்ராதேவி, தாராபுரம் ஆயில் மில் அதிபர் தங்கவேல் மற்றும் சிலர் உள்ளனர். திருச்செங்கோடு சிறப்பு கோர்ட்டில் இந்த வழக்கு நடந்து வருகிறது. இந்த வழக்கில் எங்களுக்கு சாதமாக தீர்ப்பு வழங்க ஏதாவது உதவ முடியுமா?’’ என கேட்டுள்ளார். அதற்கு, முக்கிய சாட்சிகளை கேரளாவில் உள்ள கூலிப்படையை ஏவி கொல்லும்படி எஸ்ஐ சரவணன் ஆலோசனை வழங்கியுள்ளார்.
அப்போது தனக்கு தெரிந்த கூலிப்படை இருப்பதாகவும், இதற்கு பல கோடி ரூபாய் செலவாகும் என்றும் தெரிவித்துள்ளார். இதற்கு தண்டபாணி சம்மதம் தெரிவித்ததை தொடர்ந்து கேரளத்தை சேர்ந்த கூலிப்படையை தயார் செய்து சரவணன் கொடுத்துள்ளார். இதற்காக பல கோடி ரூபாய் கைமாறியுள்ளது. இதையடுத்து முக்கிய சாட்சியான தாராபுரம் ஆயில் மில் உரிமையாளர் தங்கவேல் (55) என்பவரை கடந்த 7ம் தேதி கேரள கூலிப்படையினர் வெட்டிக் கொல்ல முயன்றனர்.
இதில் அதிர்ஷ்டவசமாக அவர் மீட்கப்பட்டு கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வழக்குப்பதிந்த தாராபுரம் போலீசார் ஆயில் மில் உரிமையாளர் மீதான தாக்குதலுக்கு காரணமான கேரள மாநிலத்தை சேர்ந்த 3 பேர் மற்றும் சதி திட்டத்திற்கு உடந்தையாக இருந்த இருவரை கைது செய்தனர்.
மேலும், சாட்சிகளை கொலை செய்த கூலிப்படைக்கு ரூ.5 லட்சம் முன்பணம் கொடுத்ததாக பள்ளி தாளாளர் தண்டபாணியின் மனைவி சரஸ்வதி (50), அவரது சம்பந்தியும் (கார்த்தியின் மாமியார்) சேலத்தில் ஆடை உற்பத்தி தொழில் நடத்தி வருபவருமான ஹேமா (50) ஆகியோரை கடந்த 18ம் தேதி கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர். சாட்சிகளை கொலை செய்வதற்கு மூளையாக செயல்பட்ட எஸ்.ஐ. சரவணனை நேற்று முன்தினம் நள்ளிரவு போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், பாளையங்கோட்டை சிறையில் தண்டபாணியிடம் ஏற்பட்ட உடன்பாட்டை ஒப்புக்கொண்டுள்ளார். தமிழ்நாடு, கேரளா, பீகார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து கூலிப்படையினரை வாட்ஸ் அப் குழுக்கள் மூலம் ஒருங்கிணைத்து, தேவைக்கேற்ப செயல்படக்கூடிய பெரிய நெட்வொர்க்கை எஸ்.ஐ. சரவணன் உருவாக்கி இருந்து உள்ளார். அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டுள்ளார்.
முக்கிய சுற்றுலாத் தலங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூலிப்படைகளை நேரில் சந்தித்து திட்டங்களை இறுதி செய்து, தகவல் பரிமாற்றம் மற்றும் பணப்பரிமாற்றம் மேற்கொண்டுள்ளனர். ஒவ்வொரு ஒப்பந்தக் கொலைக்கும் கோடிக்கணக்கில் பணம் வசூலிக்கப்பட்டுள்ளது. அதனை கூலிப்படைக்கு பிரித்து வழங்கும் பொறுப்பையும் எஸ்.ஐ.சரவணனே மேற்கொண்டுள்ளார் என விசாரணையில் தெரியவந்து உள்ளது.
இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். ஆணவக்கொலை வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை, கடந்த மாதம் எஸ்.ஐ. சரவணனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியிருந்த நிலையில், தற்போது அவர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
* பல கொலைகளில் தொடர்பா?
எஸ்.ஐ சரவணன் கூலிப்படை ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டுள்ளதாகவும், பல கொலைகளுக்கு கோடிக்கணக்கில் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் போலீஸ் விசாணையில் தெரியவந்து உள்ளது. இதனால், தென்மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலமான கேரளா உள்ளிட்ட இடங்களில் கூலிப்படை ஏவி கொலைகளை சரவணன் டீம் செய்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இதனால் அவரிடம் போலீசார் வேறு கொலைகளில் தொடர்பு உள்ளதா என விசாரிக்கின்றனர்.
* அனைவரையும் தீர்த்துக்கட்ட மேலும் 2 கூலிப்படை
முருகானந்தம் கொலை வழக்கில் முக்கிய சாட்சிகளாக உள்ள அனைவரையும் தீர்த்துக்கட்ட எஸ்.ஐ. சரவணன் மூலம் பள்ளி தாளாளர் தண்டபாணியின் குடும்பத்தினர் 2 கூலிப்படைகளை களம் இறக்கியுள்ளதாக எஸ்ஐ வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.
* திருச்செங்கோடு கோர்ட்டுக்கு மாற்றம் ஏன்?
சாட்சிகளின் பாதுகாப்பு கருதி திருப்பூர் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வக்கீல் முருகானந்தம் கொலை வழக்கு விசாரணையானது திருச்செங்கோடு சிறப்பு நீதிமன்றத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் பாளையங்கோட்டை, கரூர், திருச்செங்கோடு ஆகிய 3 நகரங்களில் பிரத்யேகமாக கட்டப்பட்ட சிறப்பு நீதிமன்ற கட்டிடத்தில் விசாரணைக்கு அரசு தரப்பு சாட்சியாக வரும் நபர்கள் குற்றவாளிகளாக அடைத்து வைக்கப்பட்டுள்ளவர்களை சிறப்பு கண்ணாடி சுவர் வழியாக நேரில் பார்க்கலாம்.
அதே நேரத்தில் மறுபுறம் உள்ள குற்றவாளிகள் தங்களுக்கு எதிராக சாட்சி சொல்ல வருபவர்கள் யார்? என பார்க்க முடியாது. இதனால் சாட்சி சொல்ல வருபவர்கள் அச்சமின்றி தான் பார்த்த விஷயங்களை சாட்சியாக கூறி அவர்கள் வந்த வழி சுவடே தெரியாமல் பாதுகாப்பான மாற்று வழியாக திரும்பி செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் சாட்களின் பாதுகாப்பு கருதி இந்த கொலை வழக்கு திருச்செங்கோடு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
