சென்னை: தமிழக பதிவுத்துறைத் தலைவர் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு பத்திரப் பதிவுத் துறையில் வெளிப்படைத்தன்மையையும், பொதுமக்களின் வசதியையும் மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் மனைப் பிரிவுகளின் முதல் விற்பனையை வரும் ஆகஸ்ட் 17ம் தேதி முதல் கட்டாயமாக “வருகையில்லா ஆவணப்பதிவு’’ முறையில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் மற்ற ஆவணப் பதிவுகளும் இந்த முறையின் கீழ் கொண்டுவரப்பட உள்ளன. இந்த புதிய நடைமுறை குறித்து கட்டட விற்பனையாளர்கள், வங்கியாளர்கள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை தீர்க்கவும், வருகையில்லா பதிவு முறையை செயல் விளக்க காட்சி மூலம் விளக்கவும் மாபெரும் பயிற்சி மற்றும் ஆலோசனை கூட்டம் நாளை காலை 10 மணிக்கு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் தலைமையில் சென்னை பெருநகர மாநகராட்சி அலுவலகத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனவே கட்டிட விற்பனையாளர்கள், இந்திய கட்டுமான கூட்டமைப்பின் பிரதிநிதிகள், வங்கியாளர்கள் மற்றும் நிதி நிறுவனங்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு தங்களின் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம். தங்களது கருத்துகள், ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளை வழங்கி இத்திட்டத்தை சிறப்பாக நடை முறைப்படுத்த தங்களது முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.
இக்கூட்டத்தில் கலந்துகொள்ள ஆர்வமுள்ள நிறுவனங்கள் மற்றும் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் 8300828865 என்ற தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
