சென்னை: அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகைகளைப் பெற மாணவர்களின் விவரங்கள் இஎம்ஐஎஸ் வலைதளத்தில் உள்ளீடு செய்யப்படும். இதுதொடர்பான வழிகாட்டுதல்களை வழங்கிப் பள்ளிக்கல்வி இயக்குநர், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில் கூறியுள்ளதாவது:
பள்ளிக்கல்வியில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு அரசால் வழங்கப்படும் அனைத்து கல்வி உதவித்தொகைகளும் இஎம்ஐஎஸ் (EMIS) வலைதளத்தில் உள்ளீடு செய்யப்பட்ட மாணவர்களின் வங்கிக் கணக்கு எண்ணிற்கு அந்தந்த நலத்துறை வாயிலாக நேரடியாக வரவு வைக்கப்பட்டு வருகிறது. மேலும், கடிதம் மற்றும் இணையவழிக் கூட்டங்கள் வாயிலாக மாணவர்களுக்கு ஆதார் அட்டை எடுத்தல், புதுப்பித்தல் மற்றும் வங்கிக் கணக்கு துவங்குதல் போன்ற பணிகளை அந்தந்த மாவட்ட அஞ்சல் துறையுடன் இணைந்து முகாம் நடத்தி விரைவாக இப்பணியினை முடித்திட அறிவுறுத்தப்பட்டது. இப்பணியினை கண்காணிக்க வாரந்தோறும் புதன்கிழமை மீளாய்வு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. பள்ளி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகைத் திட்டங்கள் செயல்படுத்துவதற்கு வலைதளத்தில் கீழ்க்கண்ட பதிவுகள் மேற்கொள்ள தெரிவிக்கப்படுகிறது.
மாணவர்களின் ஆதார் எண், வங்கி கணக்கு எண், ஆண்டு வருமானம் மற்றும் சாதி உள்ளிட்ட விவரங்களைச் சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர் கட்டாயமாக சரிபார்த்து உள்ளீடு செய்யப்பட வேண்டும். அதற்கான அறிவுரைகளை அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் வழங்கிடுமாறு தெரிவிக்கப்படுகிறது. (இப்பணிக்கு முழுப்பொறுப்பு சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர் ஆவார்.)
அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் அந்தந்த மாவட்டங்களில் உள்ள அனைத்து வகை பள்ளிகளும் இஎம்ஐஎஸ் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்யப்பட வேண்டும் (இப்பணிக்கு சார்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் முழுப்பொறுப்பாவார்.) கிராமப்புறத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறையால் 3 முதல் 6ம் வகுப்பு வரை ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருவதால், கிராமப்புறங்களில் பயிலும் மாணவர்களுக்கு இஎம்ஐஎஸ் வலைதளத்தில் கிராமப்புறம் என கட்டாயமாகக் குறிக்கப்பட வேண்டும்.
செயல்பாடற்ற மாணவர்களின் வங்கி கணக்கினை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வரத் தக்க நடவடிக்கை எடுக்க தலைமையாசிரியருக்கு அறிவுறுத்த வேண்டும். தேவைப்படின் புதிதாக அஞ்சல் வங்கிக் கணக்கு துவங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
