மதுரை: பழநி பத்திரப்பதிவு விவகாரத்தில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் விசாரிக்க வேண்டும் என அமைச்சர் நிர்மல்குமார் கூறியுள்ளார். மதுரை சிம்மக்கல் பகுதியில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் விழுதுகள் ஒருங்கிணைந்த சேவை மையத்தை அமைச்சர் நிர்மல் குமார் நேற்று துவக்கி வைத்தார்.
பின்னர் அவர், அளித்த பேட்டி;
எடப்பாடி என்ன செய்கிறார்? அதிமுக தலைமையை நம்பி இனி யார் பயணிப்பார்கள்? அதிமுகவில் யாருமே புதிதாக சேர முடியாத நிலையில் உள்ளது. கட்சி தலைமை கைவிட்டதற்கு பின்னர் தான் அவர்கள் தவெகவிற்கு வந்தார்கள். தொகுதிக்குள் செல்ல முடியாமல் அதிமுக எம்எல்ஏக்கள் பலர் சென்னையில் முடங்கி உள்ளனர். மாஜி அமைச்சர் உதயகுமார் ஒரே கட்சியில் 5 நிலைப்பாடு எடுத்தவர். ஜெயலலிதா முதல் எடப்பாடி வரை எல்லோரையும் முதல்வராக்க முயன்றவர். இப்போது எடப்பாடி பழனிசாமியை காலி செய்து விட்டு பொதுச்செயலாளராக முயற்சி செய்து கொண்டிருக்கிறார்.
நான் எனது சுய லாபத்துக்காக எந்த முடிவையும் எடுக்கவில்லை என்றார்.பழநி கோயில் நிலத்தை பத்திரப்பதிவு செய்யக்கூடாது என அறநிலையத்துறை இணை ஆணையர் தொடர்ந்து கூறிவந்துள்ளார். அதையும் மீறித்தான் பதிவு செய்யப்பட்டுள்ளது. மிகவும் நுணுக்கமாக நடந்துள்ளதாக தெரிகிறது. இதில் தொடர்புடைய யாராக இருந்தாலும் விசாரிக்கப்பட வேண்டும். பாமகவுடன் எவ்வித பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. யூகத்தின் அடிப்படையில் பேசக்கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
