சென்னை: மாதவிடாய் நிறைவு பெற்ற பெண்களுக்காக சிறப்பு முன்னெடுப்பு எடுக்கப்படும் என அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் சென்னை மெனோபாஸ் சொசைட்டி (The Menopause Society) சார்பில் தென் மண்டல கருத்தரங்கம் நடந்தது. இந்த நிகழ்வில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் அருண் ராஜ், பொது சுகாதாரத்துறை இயக்குநர் சோமசுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தொடர்ந்து, அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
மக்கள் தொகையில் சரிபாதி பெண்கள் உள்ளனர். ஒவ்வொரு பெண்ணும் தன் வாழ்நாளில் மூன்றில் ஒரு பகுதியை மாதவிடாய் நிறைவு பெற்ற காலத்தில் கழிக்கிறார். அந்தப் பருவத்தில் அந்த வயதில் சந்திக்கும் பிரச்னைகள் ஏராளம். மாதவிடாய் நிறைவு பெறும் காலத்திற்கு இரண்டு முதல் மூன்று வருடங்களுக்கு முன்பே உடலில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாகப் பல பிரச்னைகளை எதிர்கொள்வார்கள். மாதவிடாய் நிறைவு பெற்ற பெண்கள் சந்திக்கும் பிரச்னைகள் தொடர்பாக அதை தீர்க்கும் அளவுக்கு பொது சுகாதாரத் துறையில் முக்கியத்துவம் இல்லாத காரணத்தால் பெரும்பாலும் பெண்கள், குறிப்பாக கிராமப்புறப் பெண்கள் தனிமையில் இந்த பிரச்னைகளைச் சந்தித்து வேதனைக்கு உள்ளாகிறார்கள்.
இந்திய அளவில் பல நோய்களுக்கு தனி முன்னெடுப்பு உள்ளது. தேசிய அளவில் ஒரு முன்னெடுப்பு இந்த மாதவிடாய் காலம் நிறைவு பெற்ற பெண்களுக்கு இல்லை. இந்த கருத்தரங்கம் மூலமாக மாதவிடாய் காலம் நிறைவு பெறும் பெண்களின் பிரச்னைகள் குறித்த விழிப்புணர்வு எங்களுக்கும் பல பெண்களுக்கும் கிடைத்தது. கண்டிப்பாக முதலமைச்சர் தலைமையில் இவர்களுக்கென தனியாக பிரத்யேக பொது சுகாதார முன்னெடுப்பை முதலமைச்சர் மற்றும் துறை அதிகாரிகளிடம் கலந்துபேசி எடுக்க முடிவெடுத்திருக்கிறோம்.
மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க 23ம் தேதி இறுதி நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் கவுன்சலிங்கும் தொடங்கப்படும். நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியாத மாணவர்கள் எந்த மன அழுத்தத்திற்கும் உள்ளாக தேவையில்லை. 104 என்ற உதவி மையம் பிரத்யேகமாக ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறோம். அதில் பயிற்சி பெற்ற மனநல ஆலோசகர்கள் இருக்கிறார்கள். இந்த அவசர அழைப்பு எண் மூலம் ஆலோசகர்கள் வழங்கும் ஆலோசனை மூலம் பிரச்னையை தீர்க்கவும், வேறு கண்ணோட்டங்களைப் பார்க்கவும் வாய்ப்பு ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.
