வீட்டு வசதி வாரிய வீட்டுமனை ஒதுக்கீடு விவகாரம்: முன்னாள் முதல்வர் கலைஞரின் பாதுகாவலர் மீதான வழக்கு ரத்து; உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கடந்த 2008ல் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி, அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான வீட்டை மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் பாதுகாவலராக இருந்த கணேசனுக்கு பொதுமக்கள் ஒதுக்கியதில் முகப்பேர் பகுதியில் 4,370 சதுர அடி காலி மனை முறைகேடாக ஒதுக்கீடு செய்ததாக 2012ல் லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு காவல்துறை வழக்கு பதிவு செய்தது. மேலும் கணேசன், அவரின் மனைவி பத்மா, ஐ.பெரியசாமிக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் இருந்து ஐ.பெரியசாமியை விடுவித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யும் வகையில் உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளார்.

உயர் நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக பெரியசாமி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது. இந்நிலையில் கணேசன் மற்றும் பத்மாவுக்கு எதிரான வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில், தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி கணேசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆர்.கணேஷ்குமார், வழக்கை ரத்து செய்ய கூடாது என வாதிட்டார்.

கணேசன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கே.முத்து கணேச பாண்டியன், முறையான அரசு அனுமதிகளுக்கு பிறகும் காவல்துறை அனுமதிக்கு பிறகு மனை வாங்கப்பட்டது. அரசு தரப்பில் கூறிய குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானது. விற்பனை பத்திரங்கள் மூலமாக பெற்ற மனையில் தன்னுடைய 15 சதவீத சொத்தை மட்டுமே விற்று பணம் பெற்றுள்ளார். இதில் எந்த முறைகேடும் இல்லை என்று வாதிட்டார். இரு தரப்பு வாதங்களுக்கு பிறகு உத்தரவிட்ட நீதிபதி ஜி.கே.இளந்திரையன், விதிகளின் அடிப்படையில் அனைத்து நடவடிக்கைகளும் உள்ளது. மேலும் மனுதாரர் தரப்பு வாதங்களை ஏற்று சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு ரத்து செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டார்.

Related Stories: