சென்னை: தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட கட்டுரை, பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அமைச்சர் ராஜ்மோகன் பரிசு வழங்கினார். தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என அண்ணா பெயர் சூட்டிய ஜூலை 18ம் நாள் ‘தமிழ்நாடு நாள் விழா’வாக சென்னை, தரமணியில் உள்ள உலக தமிழாராய்ச்சி நிறுவன அரங்கத்தில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் ராஜ்மோகன் தலைமையில் நேற்று நடைபெற்றது.
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் ராஜாராமன் வரவேற்புரை ஆற்றினார். அமைச்சர் ராஜ்மோகன் தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு மாநில அளவில் நடத்தப்பட்ட கட்டுரை போட்டியில் முதல் பரிசு பெற்ற காஞ்சிபுரம் மாவட்டம் ரா.நந்தனா என்ற மாணவிக்கு ரூ.50,000க்கான காசோலை, பாராட்டு சான்றிதழும், இரண்டாம் பரிசு பெற்ற தேனி மாவட்டம் ர.பா.தனுஸ்ரீவுக்கு ரூ.30,000க்கான காசோலை, பாராட்டு சான்றிதழ், மூன்றாம் பரிசு பெற்ற திருவண்ணாமலை மாவட்டம் பா.ஐஸ்வர்யாவுக்கு ரூ.20,000க்கான காசோலை, பாராட்டு சான்றிதழ்;
பேச்சு போட்டியில் முதல் பரிசு பெற்ற திருவாரூர் மாவட்டம் பி.கிஷோர் என்ற மாணவனுக்கு ரூ.50,000க்கான காசோலை, பாராட்டு சான்றிதழ், இரண்டாம் பரிசு பெற்ற கடலூர் மாவட்டம் பா.வர்ஷாவுக்கு ரூ.30,000க்கான காசோலை, 3ம் பரிசு பெற்ற மயிலாடுதுறை மாவட்டம் க.மனிஷாவுக்கு ரூ.20,000க்கான காசோலை, பாராட்டு சான்றிதழும் வழங்கினார். தமிழ் வளர்ச்சி துறையின் இயக்குநர் அருள் நன்றி கூறினார்.
