ஏரல், ஜூலை 13: முக்காணியில் இருந்து பழையகாயல் செல்லும் மெயின் ரோட்டோரம் மண் குவியல், முட்செடி, பள்ளம் ஆகியவற்றால் விபத்து ஏற்பட்டு வருகிறது. இதனை உடனடியாக சீரமைத்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருச்செந்தூரில் இருந்து தூத்துக்குடி செல்லும் மெயின் ரோட்டில் தினமும் பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. பிற மாவட்டங்களில் இருந்து திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் இவ்வழியாக செல்வதால் எப்பொழுதுமே தூத்துக்குடி- திருச்செந்தூர் ரோட்டில் போக்குவரத்து அதிகளவு இருந்து வருகிறது. இந்த ரோட்டில் முக்காணியில் இருந்து பழையகாயல் வரை சாலையோரத்தில் குவிந்துள்ள மணல்கள், இருசக்கர வாகனங்கள் செல்வதற்காக போடப்பட்டுள்ள வெள்ளைகோடு வரை குவிந்துள்ளது. இதேபோல் பல இடங்களில் முட்செடி, கொடிகள் ஆக்கிரமித்துள்ளன.
மேலும் ராமச்சந்திரா விலக்கு அருகில் சாலையோரத்தில் மிகப்பெரிய அளவில் பள்ளம் காணப்படுகிறது.
சாலை ஓரத்தில் பல இடங்களில் மின்விளக்கு வசதியும் இல்லாமல் இருந்து வருகிறது. இதனால் இச்சாலையில் இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் அடர்ந்து வளர்ந்துள்ள முட்செடிகள் தெரியாமல் அவர்களது சட்டையை பிடித்து இழுத்து கிழித்தும், கண்களை குத்தியும் காயம் ஏற்படுத்தி விடுகிறது. சாலையோர பள்ளம் இருட்டில் தெரியாததால் அதில் விழுந்து விபத்துக்குள்ளாவதும் தொடர் கதையாகி வருகிறது. இரவு நேரத்தில் சாலையோரத்தில் குவிந்துள்ள மண் தெரியாமல் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து விபத்துகள் ஏற்பட்டு வருகிறது.எனவே இச்சாலையில் குவிந்துள்ள மண் குவியல், முட்செடிகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக அகற்றிட வேண்டும். சாலை ஓரத்தில் ஏற்பட்டுள்ள படுகுழியையும் சீரமைத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும். அதேபோல் முக்காணி கேஸ் பல்க் அருகில் இருந்து பழையகாயல் வரை வரும் வாகனங்கள், அதிவேகமாக சென்று வருவதால் இப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. இந்த இடங்களில் ஆங்காங்கே வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த பேரிகார்டுகள் வைத்திட வேண்டும். பேரிகார்டு இருப்பது வாகன ஓட்டிகளுக்கு தெரியுமாறு அந்தந்த பகுதியில் மின்விளக்கு வசதி அமைத்து கொடுக்க வேண்டுமென இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து திமுக மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் முக்காணி சுபமாரியப்பன் கூறுகையில், திருச்செந்தூரில் இருந்து முக்காணி, பழையகாயல் வழியாக தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் கார், வேன், பஸ் மற்றும் இருசக்கர வாகனங்கள் மூலம் பயணித்து வருகின்றனர். முக்கிய போக்குவரத்து சாலையாக உள்ள இந்த ரோட்டில் முக்காணியில் இருந்து பழையகாயல் வரை பல இடங்களில் சாலையோரத்தில் மண் குவியல், முட்செடி ஆக்கிரமிப்பு, சாலையோரத்தில் உள்ள பள்ளத்தால் விபத்து ஏற்படுகிறது. இதேபோல் முக்காணியில் குப்பை கொட்டுவதற்கு என சாலையோரத்தில் எந்தவித வசதியும் செய்து கொடுக்காததால் சாலையோரத்தில் கொட்டப்படும் குப்பையானது பறந்து ஆங்காங்கே சிதறி கிடக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையோரத்தில் உள்ள மண் குவியல், முட்செடிகளை அகற்றியும், ரோட்டில் ஏற்பட்டுள்ள பள்ளத்தையும் சீரமைத்தும், குப்பை தொட்டிகள் வைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
