தூத்துக்குடி, ஜூலை 13: கோவில்பட்டி காந்தி நினைவு மண்டப அறக்கட்டளையின் கடைகள் வாடகைக்கு விடப்பட்டு, அதன் மூலம் கிடைக்கும் வருமானம் அறக்கட்டளை வங்கிக் கணக்கில் சேர்க்கப்பட்டு வந்தது. இந்த அறக்கட்டளையின் பெயரில் இடம் வாங்குவதற்காக வங்கிக் கணக்கில் இருந்த ரூ.36 லட்சம் பயன்படுத்தப்பட்டதாகவும், இந்த பரிவர்த்தனையில் பல லட்சம் ரூபாய் முறைகேடு நடைபெற்று உள்ளதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கடந்த 15.11.2025ல் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் காங். நிர்வாகிகள் திருப்பதி ராஜா, சுப்பராயலு மற்றும் கிராம வங்கி மேலாளர் கார்த்திகை லட்சுமி ஆகியோர் மீது கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பெருமாள்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், நிதி முறைகேடு வழக்கில் தொடர்புடைய மாநில பொதுக்குழு உறுப்பினர் திருப்பதிராஜா, முன்னாள் மாவட்ட தலைவர் காமராஜ், மாவட்ட பொதுச்செயலாளர் சுப்பராயலு ஆகிய 3 பேரும் தற்காலிகமாக கட்சி பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளனர். எனவே காங்கிரஸ் நிர்வாகிகள் யாரும் இவர்கள் 3 பேரிடமும் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டாம் என தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது. மேலும் இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மற்றும் சொத்து மீட்பு குழு தலைவரிடமும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.
