அகோவில்பட்டி, ஜூலை 13: அழகுமுத்துக்கோன் குருபூஜை விழாவில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் 255 மோட்டார் வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. ரூ.2.34 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டு உள்ளது. சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோனின் 316வது குருபூஜை விழாவையொட்டி பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், மாவட்டம் முழுவதும் தூத்துக்குடி மாவட்ட போலீசார் சிறப்பு வாகனத் தணிக்கை மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
மேலும் மதுரை கிளை சென்னை உயர்நீதி மன்றத்தின் வழிகாட்டுதல்கள் மற்றும் உத்தரவுகளின்படி மேற்கொள்ளப்பட்ட இந்த சிறப்பு சோதனையில், போக்குவரத்து விதிகளை மீறிய 255 மோட்டார் வாகனங்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதன் மூலம் ரூ.2 லட்சத்து 34 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அபாயகரமான முறையில் வாகனம் ஓட்டுதல் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய சம்பவங்கள் தொடர்பாக 3 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக தூத்துக்குடி மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
