பாலுக்கும் காவல்… பூனைக்கும் காவல்… தவெகவை ஏன்டா ஆதரிச்சோம்ன்னு திருமாவளவன் உணரும் காலம் வரும்: நயினார் பளீச்

நெல்லை: பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நெல்லையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக இருக்கிறது. ஏன் இதனை சரி செய்ய தமிழக முதலமைச்சர் விஜய் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆறு மாதம் அவகாசம் கொடுத்து ஒரு ஆட்சியை பார்க்க வேண்டும். ஆனால் சட்டம் ஒழுங்கு மோசமானதை பார்த்துக் கொண்டு இருக்க முடியாது. தவறுகளை உடனடியாக தடுக்க தவெக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாலுக்கும் காவல் பூனைக்கும் காவல் என்ற அடிப்படையில் திருமாவளவன் பேசி வருகிறார். திருமாவளவன் தவெகவிற்கு ஏன்டா ஆதரவளித்தோம் என உணரும் காலம் வரும். அங்கு ஒரு கால், இங்கு ஒரு கால் வைத்திருக்கிறார். தவெகவினர் ரீல்ஸ் எடுக்க கேமராவை கொண்டு வந்து மிரட்டுகின்றனர். இந்த ஆட்சியை பற்றி நான் குறை சொல்லவில்லை. அவர்களுக்கு சிறிது காலம் எதிர்க்கட்சிகள் அவகாசம் கொடுக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. அதேவேளை எதிர்க்கட்சிகள் தவெகவின் செயல்பாடுகளை கண்காணிப்பது அவர்களின் கடமையாகும். தமிழகத்தில் இடைத்தேர்தல் பற்றி நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.

அமைச்சர்கள் பள்ளிகளில் ஆய்வு நடத்துவது தவறில்லை. ஆனால் அமைச்சர் குழந்தைகளை அடிமைத்தனம் போல் நடத்தியது தவறாகும். குழந்தைகளிடம் அடக்குமுறை செய்வது சரியாகாது. குழந்தைகளை கட்டாயப்படுத்தி ரீல்ஸ் எடுப்பதும் ஏற்க முடியாதது. தமிழகத்தில் தொடர்ந்து கொலைகள், பாலியல் தொல்லைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகி வருகிறது. தமிழக முதல்வர்தான் ரீல்ஸ் செய்கிறார் என்றால் அமைச்சர்களும் அவர்கள் பங்கிற்கு ரீல்ஸ் எடுக்கின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: