கரூர் சம்பவத்தில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்திற்கு அரசு வேலை வழங்க தடை கோரிய வழக்கு ஐகோர்ட்டில் இன்று விசாரணை

மதுரை: கரூர் நெரிசலில் பலியான 41 பேரின் குடும்பத்திற்கு அரசு வேலை வழங்க எதிர்ப்பு தெரிவித்த வழக்கு ஐகோர்ட் கிளையில் இன்று விசாரணைக்கு வருகிறது. மதுரையைச் சேர்ந்த சீனி அகமது, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: கரூரில் நடந்த தவெக அரசியல் நிகழ்ச்சியின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அரசு வேலைக்கான பணி நியமன ஆணைகளை வழங்க உள்ளனர்.

தமிழ்நாட்டில் தகுதியுள்ள பட்டதாரி இளைஞர்கள் டிஎன்பிஎஸ்சி மற்றும் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் முறையான போட்டித்தேர்வுகளை எதிர்கொண்டு, நியாயமான முறையில் அரசு வேலைக்காகக் காத்துக் கிடக்கின்றனர். இத்தகைய சூழலில், விதிகளைப் பின்பற்றாமல் தன்னிச்சையாக அரசு வேலைகளை வழங்குவது நேர்மையாகப் படிக்கும் மாணவர்களின் வாழ்வாதாரத்தையும் வேலைவாய்ப்பு உரிமையையும் பறிக்கும் செயலாகும். உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினர், சிபிஐ விசாரணையில் இருக்கும் இந்த வழக்கின் மிக முக்கிய சாட்சிகள் ஆவர்.

குற்றவாளிகளைக் கண்டறியும் விசாரணை தீவிரமாக நடந்து வரும் வேளையில், சாட்சிகளாக இருக்கும் இக்குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்குவது சாட்சிகளுக்கு நன்மைகளை வழங்கி, அவர்களின் வாக்குமூலங்களை மாற்றவோ அல்லது திசைதிருப்பவோ வழிவகுக்கும். இது நீதி நிர்வாகத்தில் தலையிடும் செயலாகும். தவெக தலைமையிலான தற்போதைய அரசு, தங்களின் கவனக்குறைவால் ஏற்பட்ட ஒரு துயரச் சம்பவத்திலிருந்து அரசியல் லாபம் பெறுவதற்காகவும், தங்களைத் தற்காத்துக் கொள்வதற்காகவும் இத்தகைய திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது.

எனவே, இந்த வழக்கில் இறுதித் தீர்ப்பு வரும் வரை, கரூர் கூட்ட நெரிசலில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்குவதற்கு உடனடியாக இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இந்நிலையில், ஐகோர்ட் மதுரை கிளையில் நீதிபதிகள் ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா மற்றும் பூர்ணிமா ஆகியோரது அமர்வில் மனுதாரர் வழக்கறிஞர் முகம்மது ரஷீத் ஆஜராகி, கரூர் சம்பவம் தொடர்பான தங்களது மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார்.

இதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதிகள், முறையாக மனு செய்து விசாரணைக்கு பட்டியலிடப்பட்டதும் விசாரணைக்கு வரும் என்றனர். மனு பட்டியலிடப்பட்டதை தொடர்ந்து, இரு நீதிபதிகள் அமர்வு முன்பாக இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வர உள்ளது. இதே பிரச்னை தொடர்பாக, நாம் தமிழர் கட்சியின் தீரன் திருமுருகன் தாக்கல் செய்த மனுவும் இன்று விசாரணைக்கு வருகிறது. முதல்வர் விஜய், கரூருக்கு இன்று செல்ல உள்ள நிலையில் மனு விசாரணைக்கு வர உள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Related Stories: