நெரிசலில் சிக்கி பலியானவர்களின் குடும்பத்துக்கு அரசு வேலை வழங்க முதல்வர் விஜய் இன்று கரூர் பயணம்

கரூர்: கரூர் பிரசாரத்தில் சிக்கி பலியானவர்களின் குடும்பத்துக்கு அரசு வேலை வழங்குவதற்காக முதல்வர் விஜய் இன்று கரூர் செல்ல உள்ளார். கரூர் வேலு​சாமிபுரத்​தில் கடந்​த செப்​.27ம் தேதி நடை​பெற்ற தவெக பிர​சா​ர கூட்​டத்​தில் நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். இது தொடர்​பான வழக்கை சிபிஐ விசா​ரித்து வரு​கிறது. இந்​நிலை​யில், கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயி​ரிழந்​தவர்​களின் குடும்​பத்​தினருக்கு அரசு வேலை உள்​ளிட்ட நிவாரண உதவி​களை வழங்க முதல்​வர் விஜய் இன்று கரூருக்கு வருகை தர உள்ளார்.

இதற்காக அவர் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் காலை 11 மணிக்கு திருச்சி வருகிறார். பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்டு கரூர் வெண்ணைமலையில் உள்ள அட்லஸ் கலையரங்க மைதானத்திற்கு வந்து அங்கு நடக்கும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசுகிறார். இதற்காக கலையரங்க மைதானத்தில் 5,000 பேர் அமரும் வகையில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்பவர்களுக்கு க்யூஆர் கோடுடன் அடை​யாள அட்டை வழங்​கப்​படுகிறது.

இந்நிகழ்ச்சி முடிந்ததும் அரசு சுற்றுலா மாளிகைக்கு சென்று சிறிது நேரம் ஓய்வெடுக்கும் விஜய், பின்னர் அங்கிருந்து காரில் சாலை வழியாக திருக்காம்புலியூர் ரவுண்டானா, கோவை சாலை முதல் தாந்தோணிமலை வரை 5 கிமீ தூரத்திற்கு ரோடு ஷோவாக செல்கிறார். பிற்பகல் 2 மணியளவில் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் ஆய்வுக்கூட்டத்தில் விஜய் கலந்து கொள்கிறார்.

தொடர்ந்து கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியம், மணவாசி ஊராட்சியில் ரூ.1,700 கோடி மதிப்பீட்டில் தோல் அல்லாத காலணிகளை உற்பத்தி செய்யும் எவர்வான் கோத்தாரி புட்வேர் நிறுவன காலணி தொழிற்சாலை கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டுகிறார். இந்த தொழிற்சாலையின் மூலம் சுமார் 13,500 நபர்கள் வேலை வாய்ப்பு பெற்று பயனடைவார்கள் என கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து, கூட்ட நெரிசலில் பலியானவர்களின் குடும்பத்தினர் 32 நபர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வழங்க உள்ளார்.

இந்த நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு அங்கிருந்து காரில் திருச்சி செல்லும் விஜய் அங்கிருந்து விமானத்தில் சென்னை புறப்பட்டு செல்கிறார். முதல்வர் வருகையையொட்டி கரூரில் 6,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.  முன்னதாக நேற்று மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணியை நேரில் பார்வையிட்ட அமைச்சர் புஸ்ஸி ஆனந்த், அனைத்து பகுதிகளையும் பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அனைவருக்கும் உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உட்பட அனைத்து நிர்வாகிகளும் உடனிருந்தனர்.

திமுக பதாகைகள் அகற்றம்: விஜய் வரு​கையை முன்​னிட்டு மாவட்ட நிர்​வாகம் சார்​பில் பேருந்து நிலை​யம், நிழற்​குடைகள் ஆகிய​வற்​றில் இருந்த திமுக பதாகைகள் அகற்​றப்​பட்டு வரு​கின்​றன. இதைக்கண்​டித்து மாநக​ராட்சி மண்டல குழுத்தலை​வர் எஸ்​.பி.க​னக​ராஜ் தலைமையிலான தி​முக கவுன்​சிலர்​கள், மாநக​ராட்​சி ஆணை​யர்​ பிரித்​வி​ராஜிடம்​ புகார்​ மனு அளித்​தனர்​.

* விஜய் பேசும் இடத்தில் சிறப்பு பூஜை கோழியை பலியிட முயன்றதால் பரபரப்பு
விஜய் நின்று பேசும் இடத்தில் நேற்று காலை சிறிய அளவில் இரும்பிலான தடுப்புகள் அமைத்து அதில் தேங்காய், வாழைப்பழம், ஸ்வீட்ஸ் ஆகியவற்றை வைத்து சூடம் ஏற்றியும், பூசணிக்காய் உடைத்தும் பூஜை நடத்தப்பட்டது. தொடர்ந்து, உயிர்ப்பலி தரும் வகையில் கொண்டு வரப்பட்டு இருந்த கோழியை சாக்கில் இருந்து வெளியே எடுத்து அறுக்க முயன்றனர். அப்போது அங்கிருந்து தவெகவினர், சுற்றிலும் பத்திரிகையாளர்கள் உள்ளனர்.

எனவே இப்போது அறுக்க வேண்டாம். இரவு பார்த்து கொள்ளலாம் என கூறியதையடுத்து கோழி வைத்திருந்த நபர் பையை தூக்கிக்கொண்டு அங்கிருந்து வெளியேறி சென்று விட்டார். இதுகுறித்து பணியாளர்கள் கூறுகையில், 41 பேர் பலியாகி 10 மாதங்கள் கழித்து தமிழக முதல்வராக விஜய் கரூருக்கு வருகை தரவுள்ளார். எனவே, இந்த முறை எந்தவித அசம்பாவித நிகழ்வும் நடைபெறக்கூடாது என்பதற்காக கோழியை அறுத்து பூஜை செய்யப்பட இருந்தது. பத்திரிகையாளர்கள் இருந்ததால் கோழி பலியிடப்படவில்லை என்றனர்.

* விஜய் அடிக்கல் நாட்டுவது திமுக ஆட்சியில் ஒப்பந்தம் போடப்பட்ட தொழிற்சாலை
கடந்த திமுக ஆட்சியில் கடந்தாண்டு பிப்ரவரி மாதத்தில் கரூர் கிருஷ்ணராயபுரம் மணவாசி ஊராட்சி மற்றும் பெரம்பலூரில் தோல் அல்லாத காலணிகளை உற்பத்தி செய்யும் தனியார் தொழிற்சாலைகளுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. இதையடுத்து, முழு வீச்சில் பணிகள் நடந்தன. முன்னதாக, தொழிற்சாலைகள் பணிகள் முடிக்கப்பட்டது. இந்த நிலையில், முடிந்த பணிகளுக்கு புதிததாக தவெக அரசு அடிக்கல் நாட்டுவது நகைச்சுவையை ஏற்படுத்தியுள்ளது.

திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டு பணிகள் முழுமையாக நிறைவடைந்த பிறகு புதிததாக தொழிற்சாலை துவங்குவது போல் போலி பிம்பத்தை ஏற்படுத்துவது ஏற்படைய அல்ல என சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது குறித்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது, அதில், ‘‘கடந்த 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் முன்னிலையில் கரூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தில் காலணி உற்பத்தி ஆலைகள் அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

அதன் ஒரு பகுதியாக ரூ. 1700 கோடி முதலீட்டில் இந்த முதல் ஆலை கரூரில் தொடங்கப்பட உள்ளது. கடின உழைப்பால் முதலீடுகள் மூலம் தமிழ்நாட்டை உயர்த்திய முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெயர் வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும்’’ என புகழாரம் சூட்டியுள்ளனர். பெரம்பலூரில் துவங்கப்பட்ட தோல் அல்லாத காலணிகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை ஓராண்டுக்குள் பணிகள் முடிக்கப்பட்டு, விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: