திண்டிவனம்: விழுப்புரம் மாவட்ட அதிமுக செயலாளராக கடந்த 2 மாதங்களுக்கு முன் பசுபதி நியமிக்கப்பட்டார். முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அப்பதவியில் நீக்கப்பட்ட நிலையில், அவர் தனது ஆதரவாளர்களுடன் தவெகவில் விரைவில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி வருகின்றன. இருப்பினும் அம்மாவட்டத்தில் நீண்டநாட்களாக செயலாளர் பதவியில் கோலோச்சிய சி.வி.சண்முகம், அதிமுகவில் தனது ஆதரவாளர்கள் நீடிப்பதை தடுக்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.
இதற்காக தன்னால் கடந்த காலங்களில் பயனடைந்த நெருக்கமானவர்கள் மூலமாக காய்களை நகர்த்தி பசுபதிக்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறார். இந்நிலையில் திண்டிவனத்தில் நேற்று அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்துக்கு எடப்பாடி ஆதரவாளரான பசுபதி ஏற்பாடு செய்திருந்தார். இதில் ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட்ட சில முக்கிய நிர்வாகிகளை பங்கேற்க விடாமல் தடுக்கும் நடவடிக்கையில் சி.வி.சண்முகம் தரப்பு மறைமுகமாக இறங்கிய நிலையில், பெரும்பாலானோர் அதை நிராகரித்து விட்டதாக தெரிகிறது.
சி.வி.சண்முகம் சொந்த ஊரிலேயே பசுபதி தரப்பு கூட்டத்தை நடத்தியதால், அசம்பாவிதங்களை தடுக்க மண்டபம் முன் போலீசார் குவிக்கப்பட்டனர். காலை 10 மணியளவில் பசுபதி ஆதரவாளர்கள் கூட்டத்தில் பங்கேற்க குழு குழுவாக திரண்டு வந்தனர். அதேபோல் சி.வி.சண்முகம் ஆதரவாளர்களும் மண்டபம் அருகே தனி கோஷ்டியாக திரண்டனர். அங்குவந்த போலீசார், சி.வி.சண்முகம் தரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது திண்டிவனம் தொகுதியில் அதிமுக தோல்வியடைந்துள்ள நிலையில் நகர செயலாளர், மாவட்ட பொருளாளர், மாவட்ட அவை தலைவர், அணி நிர்வாகிகளை அழைக்காமல் எப்படி பசுபதி தனியாக ஒரு கோஷ்டியை வைத்து கூட்டத்தை நடத்தலாம் என போர்க்கொடி தூக்கி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் இருதரப்புக்கும் மோதல் ஏற்படும் சூழல் நிலவிய நிலையில், சி.வி.சண்முகம் ஆதரவாளர்களை மண்டபத்துக்குள் அனுமதிக்க போலீசார் மறுத்தனர். இதனால் இருதரப்புக்கும் லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் சி.வி.சண்முகம் தரப்பினரை கூட்டத்தில் கலந்து கொள்ள போலீசார் அனுமதித்தனர். கூட்டத்தில் மாவட்ட செயலாளர் பசுபதி பேச எழுந்தபோது, சி.வி.சண்முகம் தரப்பினர் வெளியேறினர்.
