நடு வயதினரிடையே கண்புரை அதிகரிப்பதற்கு நீரிழிவு நோய் முக்கிய காரணம்: மருத்துவர்கள் எச்சரிக்கை

சென்னை: நடு வயதினரிடையே கண்புரை அதிகரிப்பதற்கு நீரிழிவு நோய் முக்கிய காரணம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்தியா முழுவதும் 40 மற்றும் 50 வயதினரிடையே கண்புரை (Cataract) ஏற்படும் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக, நீரிழிவு நோய் இதற்கான முக்கிய காரணியாக உருவெடுத்து வருகிறது. ரத்தத்தில் நீண்டகாலமாக அதிக அளவில் சர்க்கரை இருப்பதால், கண்ணின் இயற்கை லென்ஸில் மாற்றங்கள் விரைவாக ஏற்பட்டு, நடு வயதினரிடையே கண்புரை உருவாக்குகிறது, அது வேகமாக முன்னேறவும் வழிவகுக்கிறது.

சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பு வெளியிட்டுள்ள தகவலின்படி, தற்போது இந்தியாவில் 10.1 கோடிக்கும் அதிகமானோர் நீரிழிவு நோயுடனும், 13.6 கோடிக்கும் அதிகமானோர் நீரிழிவுக்கு முந்தைய (Prediabetes) நிலையிலும் உள்ளனர். இந்த எண்ணிக்கை வரும் ஆண்டுகளில் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீரிழிவு நோயால் ஏற்படும் கண் பாதிப்புகளில் நீரிழிவு விழித்திரை நோய் அதிகம் அறியப்பட்டாலும், கண்புரையும் தற்போது மிக முக்கியமான பிரச்னையாக உருவெடுத்து வருகிறது. அதிக ரத்த சர்க்கரை, கண்ணின் இயற்கை லென்ஸை பாதித்து, அது விரைவில் மங்குவதற்கும் பார்வை தெளிவு குறைவதற்கும் காரணமாகிறது.

கண்புரையை வயது முதிர்வால் மட்டுமே ஏற்படும் நோயாக கருத முடியாது. நீரிழிவு, உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம் போன்ற வளர்சிதை மாற்ற குறைபாடுகள் அதிகரித்து வருவதால், இளம் மற்றும் நடு வயதிலேயே கண்புரை ஏற்படும் அபாயமும் வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால், முறையான உடல்நலக் கட்டுப்பாடும், சீரான கண் பரிசோதனைகளும் பார்வை இழப்பை தவிர்க்க மிகவும் அவசியமாகின்றன.

இதுதொடர்பாக டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை டாக்டர் சவுந்தரி கூறியதாவது:
ரத்த சர்க்கரையை முறையாகக் கட்டுப்படுத்தாத 40 மற்றும் 50 வயதினரிடையே கண்புரை அதிகமாக கண்டறியப்படுகிறது. வழக்கமான கண் பரிசோதனைகள் மூலம் ஆரம்ப நிலையிலேயே மாற்றங்களைக் கண்டறிந்து, சரியான நேரத்தில் சிகிச்சை அளிப்பது பார்வை இழப்பை தடுக்க உதவும். இன்றைய டிஜிட்டல் வாழ்க்கை முறையில், கணினி, ஸ்மார்ட்போன், வீடியோ அழைப்புகள் மற்றும் வாகனம் ஓட்டுதல் போன்ற செயல்பாடுகள் அதிகரித்துள்ளதால், வேலை செய்யும் வயதினருக்கு கண்புரையின் தாக்கம் மேலும் தெளிவாக உணரப்படுகிறது.

மங்கலான பார்வை, வெளிச்சத்தில் கண் கூசுதல், நிற வேறுபாடுகளை தெளிவாகக் காண இயலாமை போன்றவை இதன் பொதுவான அறிகுறிகளாகும். 40 வயதிற்கு மேற்பட்டவர்கள், குறிப்பாக நீரிழிவு அல்லது பிற வளர்சிதை மாற்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், தவறாமல் விரிவான கண் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். ஆரம்ப நிலையிலேயே கண்புரையை கண்டறிவது, சரியான நேரத்தில் சிகிச்சை பெற்று பார்வையை பாதுகாக்கவும், வாழ்க்கை தரத்தில் ஏற்படும் பாதிப்பை குறைக்கவும் உதவும்.

Related Stories: