மேகதாதுவில் சட்டவிரோத கட்டுமான பணி நடக்கிறது: நேரில் ஆய்வு செய்த பி.ஆர்.பாண்டியன் தகவல்

ஓசூர்: மேகதாதுவில் சட்டவிரோத கட்டுமானப் பணிகள் நடைபெறுகிறது என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பாண்டியன் தெரிவித்தார். தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன், உயர்மட்டக்குழு உறுப்பினர் ஓசூர் நடராஜன், திருவாரூர் மாவட்டத் துணைச் செயலாளர் முருகேஷ் ஆகியோர் அடங்கிய குழுவினர், நேற்று கர்நாடக மாநிலம் மேகதாது பகுதியை நேரில் பார்வையிட்டனர்.

பின்னர், ஓசூர் திரும்பிய பி.ஆர்.பாண்டியன் அளித்த பேட்டி:
கனகபுரா-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 10 கிமீ தொலைவில் உள்ள சங்கமத்தில் காவிரியும், அர்க்காவதியும் இணைகின்றன. இங்கிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ள `ஆடு தாண்டு பாறை’ எனப்படும் மேகதாது பகுதியில் தான், அணை கட்ட கர்நாடகம் திட்டமிட்டுள்ளது. காவிரி ஆற்றின் தரைமட்டத்தில் உள்ள பாறைகளில், இரும்பு கம்பிகள் நடப்பட்டு அளவீடுகள் செய்யப்பட்டுள்ளன. முன்பு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்த இப்பகுதியில், தற்போது சுற்றுலாப் பயணிகள் சென்று வர பேருந்து வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேகதாது கரையிலிருந்து ஆற்றின் அடிமட்டத்திற்கு பொதுமக்கள் இறங்கிச் செல்லும் வகையில், புதிய படிக்கட்டுகள் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளன.

மக்கள் மத்தியில், அணை கட்டுவதை நியாயப்படுத்தும் வகையிலேயே, இந்தச் சுற்றுலா ஏற்பாடுகள் திட்டமிட்டு செய்யப்பட்டுள்ளது. கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமார், மேகதாது அணைக்கு எதிராகத் தமிழ்நாடு தொடர்ந்த வழக்குகளை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டதாகத் தவறான தகவல்களைப் பரப்பி வருகிறார். இந்தச் சிக்கலான சூழ்நிலையில், தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய், கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் மீது உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும். தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த எதிர்ப்பை, ஒன்றிய அரசுக்குப் பதிவு செய்யும் வகையில், அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் விவசாய சங்கங்களின் கூட்டத்தைக்கூட்டி அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

மேலும், மேகதாதுவில் ஒரு செங்கல்லைக் கூட வைக்க விடமாட்டோம் எனத் தமிழ்நாடு காங்கிரஸ் கூறுவது நடைமுறைக்குச் சாத்தியமற்றது. வெறும் வாய்மொழி அறிக்கைகளைத் தவிர்த்து விட்டு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அகில இந்தியத் தலைமை மூலம், கர்நாடக முதலமைச்சருக்கு அழுத்தம் கொடுத்து சட்டப்படியான தீர்வை எட்ட வேண்டும். காவிரி நதி நீர் உரிமையில், எந்தவித சமரசமும் செய்து கொள்ளாமல், கர்நாடகாவின் இந்த சட்டவிரோத நடவடிக்கைகளைத் தமிழக அரசு தடுத்து நிறுத்தத் வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: