பண்ருட்டி அருகே மரக்கட்டைகள் சரிந்து பரிதாபம்; டிராக்டர் மீது சரக்கு வேன் மோதல்: 3 பெண்கள் உள்பட 4 பேர் பலி

பண்ருட்டி: பண்ருட்டி அருகே டிராக்டர் மீது சரக்கு வேன் மோதியதில் மரக்கட்டைகள் சரிந்து 3 பெண்கள் உள்பட 4 பேர் உயிரிழந்தனர். கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி தாலுகா ஆயிபேட்டை மற்றும் வெங்கடாம்பேட்டை பகுதிகளை சேர்ந்த 12 தொழிலாளர்கள் சரக்கு வேனில் கூலி வேலைக்காக நேற்று அதிகாலை பண்ருட்டி சென்று கொண்டிருந்தனர். பண்ருட்டி-கும்பகோணம் சாலையில் பணிக்கன்குப்பம் அருகே முன்னால் சென்ற மரக்கட்டை ஏற்றி வந்த டிராக்டரை முந்தி செல்ல முயன்றபோது, சரக்கு வேன் கட்டுப்பாட்டை இழந்து டிராக்டர் மீது பயங்கரமாக மோதியது.

இதில் டிராக்டரில் இருந்த மரக்கட்டைகள் சரிந்து சரக்கு வேனில் இருந்த தொழிலாளர்கள் மீது விழுந்தது. தகவல் அறிந்து அப்பகுதி மக்கள் மற்றும் காடாம்புலியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்தவர்களை மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆயிபேட்டை ரவிச்சந்திரன்(60), ராணி(59) ஆகிய 2 பேர் உயிரிழந்தனர். மேல் சிகிச்சைக்காக 10 பேர் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு ஆயிபேட்டை காந்திமதி(60), வெங்கடாம்பேட்டை சத்யா(32) ஆகிய 2 பேர் உயிரிழந்தனர். மற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து காடாம்புலியூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: