மதுரை: மதுரை மாவட்டம், அழகர்கோவில் மலைமேல் முருகப்பெருமானின் ஆறாவது படைவீடாக போற்றப்படும் பழமுதிர்ச்சோலை கோயிலில் குடுமுழுக்கு விழா நேற்று கோலாகலமாக நடந்தது. விழாவையொட்டி, அதிகாலை விக்னேஸ்வர பூஜையுடன் ஆறாம் கால யாக வேள்வி, மஹா தீபாராதனையும் நடத்தப்பட்டு, அதிகாலை 5.58 மணியளவில் சிவாச்சாரியார்களின் வேத மந்திரம் மற்றும் பக்தர்களின் விண்ணை முட்டும் அரோகரா கோஷத்துடன் 42 அடி உயரம் கொண்ட கோயில் ராஜகோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு விழா நடைபெற்றது.
அதேநேரத்தில் கோயிலில் மூலவர் சன்னதி, விநாயகர் சன்னதி, வேல் சன்னதி மற்றும் பள்ளியறை விமான கோபுர கலசங்களுக்கும் புனித நீர் ஊற்றி தீபாராதனை நடைபெற்றது. அமைச்சர் நிர்மல்குமார், மதுரை கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா, எம்எல்ஏக்கள் கல்லாணை, கருப்பையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
