தொழில்நுட்ப கோளாறால் கூடங்குளம் முதலாவது அணு உலையில் பழுது: 1,000 மெகாவாட் உற்பத்தி நிறுத்தம்

நெல்லை: கூடங்குளம் முதலாவது அணு உலையில் ஏற்பட்ட பழுது காரணமாக 1000 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு மின் உற்பத்தி நடந்து வருகிறது. இந்நிலையில் முதலாவது அணு உலையில் நேற்று முன்தினம் மாலை 4.43 மணியளவில் ஜெனரேட்டர் பாதுகாப்பு அமைப்பு தொடர்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. மேலும் அணு உலையின் கன்டன்சர் குளிரூட்டும் நீர் இரைப்பானிலும் பழுது ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

முதலாவது அணு உலையில் ஏற்பட்ட திடீர் பழுது காரணமாக 1000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய 562 முதல் 576 மெகாவாட் மின்சாரம் கிடைப்பதில் தற்காலிக சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இப்பழுதை சரி செய்யும் பணியில் இந்தியா மற்றும் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் ஈடுபட்டு வரு
கின்றனர்.

தமிழகத்தின் ஒருநாள் மின்தேவை 19 ஆயிரம் மெகாவாட்டாக உள்ளது. தற்போது தென்மேற்கு பருவமழைக்காலமும் கோடைக்காலம் போலவே உள்ளதால், மின் சாதனங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதனால் நாள் ஒன்றுக்கு மின்சார தேவை 21 ஆயிரம் மெகாவாட்டாக உயரும் நிலையில், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு பெரும் பின்னடைவாக உள்ளது. இதன் காரணமாக மின்தட்டுப்பாடு அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

Related Stories: