திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட முதல்வர் படைப்பகம் தனியார் வசமாகிறதா..? கடும் விமர்சனம் எழுந்த நிலையில் மாநகராட்சி விளக்கம்

சென்னை: சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் செயல்பட்டு வரும் ‘முதல்வர் படைப்பகம்’ மையங்களின் பெயரிலிருந்து ‘முதல்வர்’ என்ற சொல் நீக்கப்பட்டு, இனி வெறும் ‘படைப்பகம்’ என்று மட்டுமே அழைக்கப்படும் என சென்னை மாநகராட்சியின் புதிய டெண்டர் ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது. சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் முதல்வர் படைப்பகம் மையங்களை, தனியார் நிறுவனம் மூலம் பராமரிப்பதற்கான பணிகளுக்கான புதிய டெண்டர் சமீபத்தில் கோரப்பட்டது. இந்த அதிகாரப்பூர்வ டெண்டர் ஆவணங்களில், இதுவரை ‘முதல்வர் படைப்பகம்’ என்று அழைக்கப்பட்டு வந்த இடங்கள் அனைத்தும், ‘படைப்பகம்’ என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளன.

நகர்ப்புறங்களில் வசிக்கும் ஏழை, எளிய மாணவர்கள் மற்றும் போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்களுக்கு ஒரு சிறந்த, நவீன கற்றல் சூழலை உருவாக்குவதே இந்த மையங்களின் முக்கிய நோக்கமாகும். இந்த திட்டம் கடந்த திமுக ஆட்சியில் அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலினால் கொண்டு வரப்பட்டது. சென்னையில் மொத்தம் 16 இடங்களில் செயல்பட்டு வரும் இந்த மையங்களில் மாணவர்கள் எவ்வித இடையூறுமின்றி அமைதியாகப் படிப்பதற்கேற்ற சிறந்த நூலக வசதி மற்றும் இருக்கை அமைப்புகள், டிஜிட்டல் முறையில் கல்வி கற்பதற்கும், தேர்வுகள் குறித்த தகவல்களை திரட்டுவதற்கும் அதிவேக வைபை மற்றும் கணினி வசதிகள், அரசுத் தேர்வுகள், வங்கித் தேர்வுகள் மற்றும் இதர போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்களுக்கு தேவையான முக்கியப் புத்தகங்கள் மற்றும் வழிகாட்டுதல்கள் போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

முன்னதாக, தமிழக அரசு கொண்டு வந்த ‘நான் முதல்வன்’ திட்டத்தின் பெயரிலும் சமீபத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், தற்போது இந்த ‘முதல்வர் படைப்பகம்’ பெயரிலும் ‘முதல்வர்’ என்ற சொல் நீக்கப்பட்டுள்ளது. அரசின் திட்டப் பெயர்களில் அடுத்தடுத்து மேற்கொள்ளப்படும் இத்தகைய மாற்றங்கள் நிர்வாக ரீதியானதா அல்லது ஏதேனும் அரசியல் பின்னணி சார்ந்ததா என்பது குறித்து பல்வேறு தரப்பினரிடையே கருத்துப் பரிமாற்றங்களும் விவாதங்களும் எழுந்துள்ளன. இந்த பெயர் மாற்றம் அரசு அலுவலகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், இதுகுறித்து சென்னை மாநகராட்சி தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை:
சென்னை மாநகராட்சி மற்றும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் 24 முதல்வர் படைப்பகங்கள் கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டு, அதில் 15 முதல்வர் படைப்பகங்கள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இதர 9 முதல்வர் படைப்பகங்கள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த 15 முதல்வர் படைப்பகங்களும், சென்னை மாநகராட்சியால் சிறப்பாக நடைபெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. மேலும், இதை சிறப்பாக நடத்துவதற்காக, இப்படைப்பகங்களுக்கு தேவையான பாதுகாவலர், தூய்மைப் பணியாளர், வரவேற்பாளர் உள்ளிட்ட பணிகளுக்கு மட்டுமே ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. முதல்வர் படைப்பகங்கள் தனியார் மயமாக்கப்படவில்லை என்பது இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: