உள்ளாட்சி தேர்தல் சீட் ஒதுக்கீடு; தோழமை கட்சிகளுடன் பேச்சு: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

கோபி: ஈரோடு மாவட்டம் கோபி அருகே பாரியூரில், அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று அளித்த பேட்டி:
தவெக தேர்தல் அறிக்கையில், 40 ஆண்டுகளுக்கும் மேலாகக் குடியிருக்கும் நபர்களுக்குப் பட்டா வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து, நத்தம் புறம்போக்கு மற்றும் இதர இடங்களில் குடியிருப்பவர்கள் பற்றிய ஆய்வுப் பணிகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். முதலமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில், விரைந்து பட்டாக்கள் வழங்க புதிய நடைமுறை மாற்றங்களை உருவாக்கி வருகிறோம்.

கொடநாடு கொலை,கொள்ளை சம்பவங்கள் குறித்து, திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற உடனே, ‘உயர் பொறுப்பில் யார் இருந்தாலும், இதில் தவறு செய்தவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் தெரிவித்திருந்தார். ஆனால், அதன்பிறகு 5 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. இது குறித்து தற்போதைய முதலமைச்சர்தான் முடிவு செய்ய வேண்டும்.

தவெகவிற்கு அனிதா ராதாகிருஷ்ணன் வந்துதான் அந்த இயக்கத்தையோ,ஆட்சியையோ காப்பாற்ற வேண்டும் என்ற நிலை இல்லை. உள்ளாட்சித் தேர்தலில், தவெகவிற்கு ஆதரவளித்த தோழமைக் கட்சிகள் போட்டியிடுவது குறித்து நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடந்தது. அனைவரும் மனம் விட்டுப் பேசினர். அந்தக் கருத்துகளைத் தற்போது வெளியில் அறிவிக்க இயலாது. காலச் சூழ்நிலைகளுக்கு ஏற்ப உரிய முடிவுகள் எடுக்கப்பட்டு முறைப்படி அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: