கத்திக்கு 2 பக்கமும் கூர்மை உண்டு என்பதை உணர்வார்கள்; தவெக குதிரை பேரம் குறித்து அடுத்தக்கட்ட நடவடிக்கை: அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ பேட்டி

திருச்செந்தூர்: முதல்வர் விஜய் பற்றி விமர்சித்ததற்காக திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ நேற்று முன்தினம் பகல் 11.20 மணிக்கு கைது செய்யப்பட்டார். அவரிடம் தூத்துக்குடி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் 6 மணி நேரம் போலீசார் விசாரணை நடத்தினர். அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்கு பின் இரவு 10.40 மணிக்கு நீதிபதி சிதம்பரம் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது அரசு தரப்பில் அரசு வழக்கறிஞர் வனிதாவும், அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பில் வழக்கறிஞர் ஜாண் அலெக்ஸாண்டரும் ஆஜராகி வாதாடினார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அரசு தரப்பில் நம்பத்தகுந்த ஆதாரங்கள் இல்லாததாகக் கூறி அனிதா ராதாகிருஷ்ணனை ஜாமீனில் விடுவித்தார். அடுத்துவரும் 3 வேலை நாட்களில் 10 ஆயிரம் பிணைத்தொகையுடன் 2 நபர் ஜாமீனுடன் ஆஜராக வேண்டும். ஆத்தூர் காவல் நிலையத்தில் தொடர்ந்து 10 நாட்கள் தினமும் ஆஜராகி கையொப்பமிட வேண்டும் என உத்தரவிட்டார்.

இந்நிலையில் அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ நேற்று காலை திருச்செந்தூர் நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது தண்டுபத்தை சேர்ந்த பாலகணேஷ், சுரேஷ்குமார் ஆகிய 2 ஜாமீன்தாரர்கள் நீதிபதி சிதம்பரம் முன்னிலையில் ஆஜராகினர். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, ஆத்தூர் காவல் நிலையத்தில் அனிதா ராதாகிருஷ்ணன், 10 நாட்கள் ஆஜராகி கையொப்பமிடுமாறு உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த அனிதா ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில் ‘‘ஆத்தூர் போலீசார் என்னை கைது செய்து சிறையில் அடைக்கலாம் என நடவடிக்கை மேற்கொண்டனர். ஆனால், நீதிமன்றம் எனக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. இருப்பினும் லண்டன் பயணம் மேற்கொள்ளும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை வழியனுப்ப செல்ல முடியவில்லை என்ற ஏக்கம்தான் எனக்கு உள்ளது. காவல்துறை மூலம் என்னை மிரட்டி குதிரை பேரம் பேசியது குறித்து தலைமையின் அறிவுறுத்தலின் பேரில் வழக்கறிஞர்களுடன் ஆலோசனை செய்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

முன்னாள் அமைச்சர்கள் மீது தொடர்ச்சியாக ஆளும் அரசு வழக்கு பதிவு செய்து திமுகவை ஏதாவது செய்து விடலாம் என எண்ணுகின்றனர். கத்திக்கு இரண்டு பக்கமும் கூர்மை உண்டு என்பதை காலம் உணர்த்தும். பாஜவை கண்டு தவெக அரசு அஞ்சுவதையே இச்செயல்கள் காட்டுகின்றன’’ என்றார்.

Related Stories: