சட்டசபை கூட்டத்தொடரை காரணம் காட்ட முடியாது; விடுமுறை நாளிலும் ஆஜராகாமல் மேலும் அவகாசம் கேட்பதா..? அமைச்சர் மரிய வில்சனுக்கு நீதிபதி கண்டனம்

புதுச்சேரி: தமிழகத்தில் தற்போது தவெக அரசில் நிதியமைச்சராக பதவி வகித்து வரும் மரிய வில்சன், தொழில் போட்டி காரணமாக கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் 8ம் தேதி புதுச்சேரி எழில் நகரில் உள்ள தனது உடன்பிறந்த தம்பி மரிய கிளோத் மற்றும் அவரது மனைவி கேரலின் ஆகியோரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, உருட்டுக்கட்டையால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக மரிய வில்சன் மீது புகார் அளிக்கப்பட்டது. அப்போது அவர் கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படும் காணொலி, தேர்தல் நேரத்தில் சமூக வலைத்தளங்களில் பரவலாக வைரலானது.

இந்த வழக்கில் காவல்துறை விசாரணையை நிறைவு செய்து, குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. குற்றப்பத்திரிகையின் நகலை பெற்றுக்கொள்வதற்காக அமைச்சர் மரிய வில்சன் நேற்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று முதலாவது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சேரலாதன் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு, நேற்று புதுச்சேரி முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்ேபாது விரைவில் தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்குவதால் நேரில் ஆஜராக இயலாது என தெரிவித்து, மேலும் அவகாசம் கோரி அமைச்சர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்
பட்டது.இதனை விசாரித்த நீதிபதி சேரலாதன், அமைச்சர் தரப்பின் கோரிக்கையை கடுமையாக விமர்சித்தார். ஏற்கனவே சட்டப்பேரவை கூட்டத் தொடரை காரணம் காட்டி 15 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால் சட்டப்பேரவை மூன்று நாட்கள் மட்டுமே நடைபெற்றது என்பதை தொலைக்காட்சி வாயிலாக தெரிந்து கொண்டேன். அலுவலக பணிகளில் சிரமம் ஏற்படக் கூடாது என்பதற்காகவே விடுமுறை நாளான சனிக்கிழமையன்று ஆஜராகுமாறு உத்தரவிட்டேன். இருப்பினும், இன்றும் (நேற்று) ஆஜராகாமல் மீண்டும் ஜூலை 22ம் தேதி வரை அவகாசம் கோருகிறீர்கள். அன்றும் சட்டப்பேரவை கூட்டத்தைக் காரணம் காட்டி ஆஜராகாமல் தவிர்க்க வாய்ப்புள்ளது என்று நீதிபதி கோபமாக தெரிவித்தார்.

இதையடுத்து, அமைச்சர் மரிய வில்சன் வருகிற 10ம் தேதி கட்டாயம் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். அமைச்சர் மரிய வில்சன் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக ஆஜராக அனுமதிக்குமாறு அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தார். அதற்கு நீதிபதி இவ்வழக்கில் இதுவரை ஒரு முறை கூட குற்றஞ்சாட்டப்பட்டவர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகவில்லை. குற்றப்பத்திரிகையை நேரில் வந்து பெற்றுக்கொள்வதே சட்ட நடைமுறை. எனவே வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜராக அனுமதி வழங்க முடியாது. கட்டாயம் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதி திட்டவட்டமாக தெரிவித்தார்.

இந்த உத்தரவால், அமைச்சர் மரிய வில்சன் வரும் 10ம் தேதி புதுச்சேரி முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

வழக்கை வாபஸ் பெறும்படி தவெகவினர் மிரட்டல்
வழக்கு விசாரணைக்கு வந்த அமைச்சரின் சகோதரர் மரிய கிளோத் நிருபர்களிடம் கூறுகையில், வழக்கை வாபஸ் பெற வேண்டும் என தவெகவினர் எங்களுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர். நாங்கள் நீதித்துறையை மட்டுமே நம்பி இருக்கிறோம். எங்களுக்கு நீதி கிடைக்கும் வரை பின்வாங்க மாட்டோம். அமைச்சரிடம் இருந்து நேரடி மிரட்டல்கள் குறித்து தற்போது பேச விரும்பவில்லை. வரும் 10ம் தேதி நடைபெறும் வழக்கு விசாரணைக்குப் பிறகு விரிவாக சொல்கிறேன்.

தாக்குதல் சம்பவத்துக்கு பிறகு நானும், என் மனைவியும் தலைமறைவாக வாழ வேண்டிய நிலை ஏற்பட்டது. தற்போதைய சூழ்நிலை காரணமாக வெளிநாட்டில் தங்கி வருகிறோம். எங்களுக்கு எதிராக நடந்த அநீதிக்கு, நீதி கிடைக்கும் வரை சட்டப் போராட்டத்தை தொடருவோம். குடும்ப அறக்கட்டளையின் நிர்வாகம் தொடர்பாக கேள்வி எழுப்பியதாலேயே இந்த மோதல் ஏற்பட்டது. அறக்கட்டளையில் மிகப்பெரிய அளவில் நிர்வாக முறைகேடுகள் நடந்துள்ளது. இது குறித்து கேள்வி கேட்டதற்காகவே நாங்கள் தாக்குதல் மற்றும் கொலை மிரட்டலுக்கு ஆளாகியுள்ளோம். அமைச்சர் மரிய வில்சனின் ஆதரவாளர்களும், சில வழக்கறிஞர்களும் மிரட்டல் தொனியில் செயல்படுகின்றனர், என்றார்.

Related Stories: