நெல்லை: நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே தந்தை, மகன் கொல்லப்பட்ட வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர். மூலச்சி பகுதியை சேர்ந்த மகேஷ், குமார் மற்றும் ஊர்க்காடு பகுதியைச் சேர்ந்த முத்துச்செல்வன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் மாலையில் காளிமுத்து(40) என்பவர் தனது மகன்கள் சின்னத்துரை(15), ஜெயராஜ்(5) ஆகியோருடன் பைக்கில் ரெட்டியார்புரத்தில் இருந்து மூலச்சிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவர்களை கார் மற்றும் 3 பைக்குகளில் மர்ம கும்பல் பின்தொடர்ந்து சென்று மாதுடையார்குளம் அருகில் காளிமுத்துவின் பைக் மீது கார் பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் பலத்த காயமடைந்த சிறுவன் ஜெயராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான்.
பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய காளிமுத்துவை அந்த கும்பல் அரிவாளால் வெட்டி, அவரது தலையை துண்டித்து படுகொலை செய்தது. சிறுவன் சின்னத்துரையின் காலில் அரிவாளால் வெட்டிவிட்டு அந்த கும்பல் தப்பிச் சென்றது.
மேலும் காளிமுத்துவின் துண்டிக்கப்பட்ட தலையை எடுத்து சென்று கல்லிடைக்குறிச்சி அருகே கரம்பை மெயின் ரோட்டில் வீசிச் சென்றது. பைக் மீது காரை மோத விட்டு தந்தை-மகன் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த இரட்டைக்கொலை குறித்து வீரவநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
போலீஸார் நடத்திய விசாரணையில் கடந்த 2006 ஆம் ஆண்டு தெருக்குழாயில் தண்ணீர் பிடிப்பதில் ஒரே சமூகத்தைச் சேர்ந்த உறவினர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் பெரும் பகையாக மாறியதாம். இதுவரை 7 பேர் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டதும் , தற்போது எதிர்தரப்பினர் பழிக்குப் பழியாக காரை மோதவிட்டு தந்தை- மகனை கொடூரமாக கொலை செய்த தகவல் கிடைத்தது.
இதையடுத்து நெல்லை மாவட்ட எஸ்பி விஸ்வேஷ் பா சாஸ்திரி உத்தரவின்பேரில் கொலையாளிகளை பிடிப்பதற்காக போலீஸார் தனிப்படைகளை அமைத்து தேடி வந்தனர்.
இது தொடர்பாக மூலச்சி பகுதியைச் சேர்ந்த சிவகுருநாதன் மகன்கள் மகேஷ், மணிகண்டன், கிருஷ்ணன், பெருமாள்பாண்டியன் மகன்கள் அருள், மணி, பட்டுராஜா, ராசையா மகன்கள் சுபாஷ், மகேந்திரன், வெள்ளப்பாண்டி மகன் தங்கதுரை, கிருஷ்ணன் மகன் கந்தன், மூக்காண்டி மகன் ராஜதுரை ஆகிய 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
தலைமறைவாகிய இந்த 11 பேரை கைது செய்ய தனிப்படை போலீஸார் தீவிரம் காட்டி வந்தனர். இந்த நிலையில் மகேஷ், குமார், முத்துச்செல்வன் ஆகிய 3 பேர் இன்று கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
