பள்ளி ஆசிரியர்களுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வு; தமிழகம் முழுவதும் 61,386 பேர் எழுதினர்: பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு இன்று நடக்கிறது

சென்னை: பள்ளி ஆசிரியர்களுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் நேற்று நடந்த இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வை தமிழகம் முழுவதும் 61,386 பேர் எழுதினர். பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு இன்று நடைபெறுகிறது. பள்ளி ஆசிரியர்கள் டெட் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. டெட் தேர்வில் தகுதி பெறாமல் பணியில் உள்ள ஆசிரியர்கள் 2 ஆண்டுகளில் தகுதி பெற வேண்டும் எனவும், ஓய்வு பெற 5 ஆண்டு மட்டும் உள்ளவர்களுக்கு தளர்வும் வழங்கப்பட்டது. இதுமட்டுமின்றி தேர்ச்சி பெறாதவர்கள் அல்லது பெற விரும்பாதவர்கள் பணியில் இருந்து கட்டாய ஓய்வு பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, தமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் லட்சக் கணக்கான ஆசிரியர்கள் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டிய நிலை ஏற்பட்டது. அதனால், ஆசிரியர்களின் வசதிக்காக 3 சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்தது. அந்த வகையில் பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கான முதல் சிறப்பு டெட் தேர்வு ஜூலை 4, 5ம் தேதிகளில் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று நடைபெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கான சிறப்பு டெட் முதல் தாள் தேர்வை 61,386 பேர் எழுதினார்கள். இந்த தேர்வை தமிழகம் முழுவதும் 222 மையங்களில் 61,386 தேர்வர்கள் தேர்வு எழுதினார்கள். இதில் ஆண் தேர்வர்கள் 12,001, பெண் தேர்வர்கள் 49,385 ஆவர். இதில் 1,321 தேர்வர்கள் மாற்றுத்திறன் கொண்டவர்கள். இந்த மாற்றுத்திறனாளிகளில் 126 மாற்றுத்திறனாளிகள் சொல்வதை எழுத உதவியாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர். குறிப்பாக சென்னையில் மட்டும் 13 மையங்களில் 3575 பேர் தேர்வு எழுதினர்.

தேர்வு 10 மணிக்கு தொடங்கிய நிலையில், தேர்வு மையத்திற்குள் காலை 8.30 மணி முதல் 9.30 மணிக்குள் அனுமதிக்கப்பட்டனர். தேர்வுக்கூட நுழைவுச் சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, ஏதேனும் ஒரு அசல் அடையாளச் சான்று, 2 பால் பாய்ண்ட் பேனாக்கள் (கறுப்பு) ஆகியவை மட்டும் தேர்வறைக்குள் அனுமதிக்கப்பட்டது. மேலும், தேர்வு அறைக்குள் பெல்ட், ஷூ, ஹை ஹீல்ஸ், டிஜிட்டல் வாட்ச் அணிந்து வரவும், செல்போன், மைக்ரோபோன் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்கள் கொண்டு வரவும் அனுமதியில்லை என்பதால் தேர்வர்கள் சோதைனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டனர். தேர்வில் முறைகேடுகள் நடக்காமல் தடுக்கும் வகையில் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை சார்ந்த இயக்குநர், இணை இயக்குநர் மற்றும் துணை இயக்குநர் நிலையில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இன்று பட்டதாரி ஆசிரியர்களுக்கு நடைபெறும் தாள்-II தேர்வை 613 மையங்களில் 1,67,743 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர். இதில் ஆண் தேர்வர்கள் 40,535, பெண் தேர்வர்கள் 1,27,208 ஆவர். இதில் 3,151 தேர்வர்கள் மாற்றுத்திறன் கொண்டவர்கள். இந்த மாற்றுத்திறனாளிகளில் 601 மாற்றுத்திறனாளிகள் சொல்வதை எழுத உதவியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: