தொடர் குற்றத்தில் ஈடுபடும் லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் விமலாவின் சஸ்பெண்டுக்கு விதிக்கப்பட்ட தடை நிறுத்திவைப்பு: சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு

சென்னை: லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் விமலாவை சஸ்பெண்ட் செய்து பிறப்பித்த உத்தரவுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நிறுத்தி வைத்து சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது. சென்னை விபசார தடுப்புப் பிரிவு இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த ராஜலட்சுமி என்பவருக்கு எதிராக எழுந்த புகாரை விசாரித்த லஞ்ச ஒழிப்புத் துறை இன்ஸ்பெக்டர் விமலா அறிக்கை சமர்ப்பித்திருந்தார்.

இதையடுத்து, இன்ஸ்பெக்டர் ராஜலட்சுமிக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை தயார் செய்யுமாறு விமலாவுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில், முதல் தகவல் அறிக்கையை தயார் செய்து லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத்துறை இயக்குநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு திருத்தங்களுக்குப் பின் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.​

இந்த சூழ்நிலையில், விமலாவை பணி இடைநீக்கம் செய்து கடந்த ஜூன் 17ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ​இந்த உத்தரவை எதிர்த்து விமலா தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி பி.டி.ஆஷா, இன்ஸ்பெக்டர் விமலாவுக்கு எதிரான பணியிடை நீக்க உத்தரவு முற்றிலும் உள்நோக்கம் கொண்டது என்று கூறி பணியிடை நீக்க உத்தரவுக்கு ஜூலை 9ம் தேதி வரை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், விமலாவின் மனுவுக்கு பதிலளிக்குமாறு லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர், துணை இயக்குனருக்கும் நீதிபதி உத்தரவிட்டார்.

இதையடுத்து, விமலா பணியிடை நீக்கத்திற்கு இடைக்கால தடை விதித்த தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்தமனு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அட்வகேட் ஜெனரல் கவுதமன் ஆஜராகி, சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள விமலா மீது ரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கியதாக புகார் வந்தது. அந்த குறிப்பிட்ட புகாரை விசாரிக்க உத்தரவிடப்பட்டு அதற்காக அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிடப்பட்டது.

விசாரணையை எதிர்கொள்ளாமல் விமலா நீதிமன்றத்தை அணுகி தடை உத்தரவு பெற்றுள்ளார். ராஜலட்சுமி என்ற அதிகாரி மீது எப்ஐஆர் பதிவு செய்ததால்தான் தன்னை சஸ்பெண்ட் செய்ததாக தனி நீதிபதியிடம் தெரிவித்து தடை உத்தரவு பெற்றுள்ளார். அவர் மீது ஏற்கனவே புகார்கள் உள்ளன. ஒருவரிடம் லஞ்சம் வாங்கியதற்கான வீடியோ ஆதாரம் உள்ளது. லஞ்சம் வாங்குவதை வழக்கமாக கொண்டுள்ளவர். எனவே, இடைக்கால தடையை ரத்து செய்ய வேண்டும் என்றார்.

இதைக்கேட்ட நீதிபதிகள், அரசு தரப்பு தனி நீதிபதியை அணுகலாமே என்று கேட்டனர். அதற்கு கூடுதல் அட்வகேட் ஜெனரல் இடைக்கால தடை பெற்றவுடன் தன்னை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என்று விமலா 2 நாட்களாக அலுவலகத்திற்கு வந்துள்ளார். உத்தரவை நிறைவேற்றவில்லை என்றால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வாய்ப்பு ஏற்படும். அதனால்தான் மேல் முறையீடு செய்தோம் என்றார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், தனி நீதிபதி உத்தரவு நிறுத்தி வைக்கப்படுகிறது. தனி நீதிபதியை அணுகி இடைக்கால தடை உத்தரவுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரலாம் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.

Related Stories: