சென்னை: சட்டப்பேரவையில் சபாநாயகருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வர உள்ளதாகவும், அதற்கு ஆதரவாக செயல்பட்டால் ரூ.35 கோடி பணம் தருவதாக தன்னிடம் பேரம் பேசியதாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ இளையராஜா கடந்த 29ம் தேதி சென்னை போலீஸ் கமிஷனர் அமல்ராஜிடம் புகார் அளித்தார்.
புகாரின்படி, திருவல்லிக்கேணி போலீசார் ஊழல் தடுப்பு சட்டம் 1988 பிரிவு 7, பிரிவு 12, பிஎன்எஸ் 318 (4), 351(2) ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு ெசய்து, சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த யூடியூபரும், தேர்தல் கருத்து கனிப்பு நடத்துபவருமான திருநாவுக்கரசு மற்றும் திருச்சியை சேர்ந்த நரேஷ் மற்றும் சென்னை மேடவாக்கத்தை சேர்ந்த தியாகராஜன் ஆகிய 3 பேரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.
பின்னர் அவர்கள் அளித்த தகவலின்படி தமிழ்நாடு நாடார் பாதுகாப்பு பேரவை தலைவரும் அதிமுக பிரமுகருமான சீனிவாசன், பள்ளிக்கரணையை சேர்ந்த செல்வன், குரோம்பேட்டை அஸ்தினாபுரம் பகுதியை சேர்ந்த ராஜன், கரூர் பகுதியை சேர்ந்த கார்த்திக் மற்றும் அதிபன் ரமேஷ் ஆகிய 5 பேரை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்கள் அளித்துள்ள வாக்குமூலத்தின்படி இந்த பேர விவகாரத்தில் தலைமறைவாக உள்ள மற்றவர்களை தனிப்படையினர் தொடர்ந்து தேடி வருகின்றனர். இந்த வழக்கில் நேற்று வரை 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
