சென்னை: மகன் கஞ்சா வழக்கில் சிக்கியதால் மதிமுக செய்தி தொடர்பாளர் பதவியில் இருந்து மின்னல் முகமது அலி நீக்கப்பட்டார். மதிமுகவின் செய்தி தொடர்பாளராக கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வந்தவர் மின்னல் முகமது அலி. இவர் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அவரது மகன் துரை வைகோ ஆகியோருக்கு மிகவும் நெருக்கமானவர். இவர்கள் இருவரும் சென்னையில் இருந்து எப்போது சொந்த ஊரான கலிங்கப்பட்டிக்கு வந்தாலும், அவர்களுடன் மின்னல் முகது அலி இருப்பார்.
இந்தநிலையில், மின்னல் முகமது அலியின் மகன் முகமது நெளபல் சாலிக்(18) சில நாட்களுக்கு முன் நெல்லை சுத்தமல்லியில் உள்ள கருங்காடு விலக்கில் போலீசாரின் வாகனச் சோதனையில் சிக்கினார். அப்போது பைக் டிக்கியில் மறைத்து வைத்திருந்த 30 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில், அவர் கஞ்சா வியாபாரம் செய்து வந்ததம், இளைஞர்களுக்கு கஞ்சாவை விற்பனை செய்து விட்டு வரும்போது சிக்கிவிட்டதாகவும் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.
இந்த தகவல் அப்போது பத்திரிகைகளுக்கு தெரியாமல், மின்னல் முகமது அலி பார்த்துக் கொண்டார். அவருக்கு சில ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளின் தொடர்பு இருந்ததால், செய்தியை முற்றிலுமாக மறைத்து விட்டார். இந்த தகவல் தெரியாமல், மின்னல் முகமது அலியை கடந்த வாரம் முதல்வர் விஜய்க்கு வைகோ அறிமுகப்படுத்தி வைத்தார். அதோடு அமைச்சர்கள் புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா ஆகியோரையும் அறிமுகம் செய்து வைத்தார். தற்போது கஞ்சா விற்பனை விவகாரம் வெளியானதும், மின்னல் முகமது அலியின் செய்தி தொடர்பாளர் பதவியை பறித்து வைகோ உத்தரவிட்டுள்ளார்.
