தலைமையகத்தில் நடந்த அவசர கூட்டத்தில் கடும் வாக்குவாதம் டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட உத்தரவு: திங்கட்கிழமை வரை திறக்க தடை: புதிய டெண்டர் விதிகளால் 3 மாதம் நீட்டிப்பு வழங்க அரசு திட்டம்?

சென்னை: டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது தொடர்பாக, நேற்று நடந்த கூட்டத்தில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. திங்கட்கிழமை வரை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம் மாநிலம் முழுவதும் மொத்தம் 4,765 மதுபானக் கடைகளை நடத்தி வருகிறது. இவற்றில் சுமார் 2,400 கடைகளுடன் இணைந்து தனியார் பார் நடத்துவதற்கு கடந்த 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் இரண்டு ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில் உரிமம் வழங்கப்பட்டிருந்தது.

இதற்கிடையே, 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இந்த பார்களின் உரிமக்காலம் கடந்த ஜூன் 30ம் தேதி வரை தற்காலிகமாக நீட்டிக்கப்பட்டிருந்தது. அந்த அவகாசமும் முடிவடைந்ததை அடுத்து, “மறு உத்தரவு வரும் வரை அனைத்து பார்களையும் உடனடியாக மூட வேண்டும்” என டாஸ்மாக் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக உத்தரவிட்டது.  இதையடுத்து சென்னை டாஸ்மாக் தலைமையகத்தில் நேற்று நடந்த அவசர ஆலோசனைக் கூட்டத்தில், அரசு அதிகாரிகளுக்கும் பார் உரிமையாளர்களுக்கும் இடையே வார்த்தை போரே வெடித்தது.

“எந்தவொரு முன்னறிவிப்பும் இல்லாமல், ஒரே நாளில் பார்களை மூடினால், மது பிரியர்கள் எங்கு செல்வார்கள்? அவர்கள் அனைவரும் குடிக்க இடமில்லாமல் பொது இடங்களிலும், தெருவிலும், குடியிருப்புப் பகுதிகளிலும் தான் தஞ்சமடைவார்கள். இது சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தாதா என்று அடுக்கடுக்கான கேள்விகளை உரிமையாளர்கள் எழுப்பினர். ஆனால், இதற்கு டாஸ்மாக் அதிகாரிகள் “அவர்கள் எங்கு குடித்தால் நமக்கென்ன? பார்களை உடனடியாக பூட்ட வேண்டும் என்பது மேலிடத்தின் மிகக் கடுமையான உத்தரவு, ” என கறாராககூறிவிட்டனர்.

இறுதியில், ‘‘வரும் திங்கட்கிழமை வரை தமிழகத்தில் உள்ள அனைத்து மதுபான பார்களும் முற்றிலும் மூடப்பட்டு தான் இருக்க வேண்டும், மீறித் திறந்தால் கடும் நடவடிக்கை பாயும்’’ என டாஸ்மாக் நிர்வாகம் தற்காலிக தடையை விதித்துள்ளது. டாஸ்மாக் விதிமுறைகளின்படி, பார்களுக்கு புதிதாக டெண்டர் விட வேண்டும் என்றால், சட்டப்படி குறைந்தது 15 நாட்களுக்கு முன்னாடியே அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட வேண்டும்.

ஆனால், ஜூன் 30ம் தேதியுடன் பழைய ஒப்பந்தம் முடிவடைந்த நிலையிலும், புதிய டெண்டர் விதிகளையோ, அறிவிப்பையோ டாஸ்மாக் நிர்வாகம் இன்னும் இறுதி செய்யவில்லை. இதனால், உடனடியாக புதிய டெண்டர் விடச் சட்டப்பூர்வமாக வழியே இல்லை என்பதால், தங்களின் நிர்வாக தோல்வியை மூடிமறைக்கவே திங்கட்கிழமைக்கு மேல் 3 மாத கால நீட்டிப்பை கண்துடைப்பாக வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த 3 மாத கால அவகாசத்திற்குள் பார்களை நவீனமயமாக்கி, கொள்ளை லாபம் ஈட்டும் வகையில் புதிய டெண்டர் விதிமுறைகளை வகுக்க திரைமறைவில் காய் நகர்த்தப்பட்டு வருகிறது. அரசின் இந்த தன்னிச்சையான, அவசர கோல முடிவால் கடந்த இரண்டு நாட்களாக தமிழகமே குடிகாரர்களின் திறந்தவெளி பாராக மாறியுள்ளது. பார்கள் பூட்டப்பட்டதால் வெறிச்சோடிய குடிகாரர்கள், மதுவை வாங்கிக் கொண்டு முக்கியச் சாலைகள், பேருந்து நிறுத்தங்கள், அரசுப் பள்ளிகளின் சுற்றுச்சுவர்கள் மற்றும் கோயில் பிரகாரங்களின் மறைவிடங்களில் பகிரங்கமாக அமர்ந்து குடித்து கூத்தடித்து வருகின்றனர்.

போதை தலைக்கேறிய நபர்கள் ஆங்காங்கே அநாகரிகமாக நடந்துகொள்வதால், அந்த வழியாகச் செல்லும் பெண்கள், வேலைக்குச் செல்வோர் மற்றும் பள்ளிச் சிறுமிகள் சொல்லொணாத் துயரத்திற்கும் அச்சத்திற்கும் ஆளாகியுள்ளனர். \\”டாஸ்மாக் மூலம் கோடிக்கணக்கில் வருமானம் பார்க்கும் அரசுக்கு, பொதுமக்களின் அமைதியைப் பற்றித் துளியும் கவலையில்லையா?\\” என பொதுமக்கள் வீதியில் இறங்கிக் கொந்தளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

காவல்துறையின் கண்துடைப்பு கண்காணிப்புகளையும் மீறி தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு கேள்விக்குறியாகியுள்ள நிலையில், வரும் திங்கட்கிழமை அரசு அறிவிக்கப்போகும் 3 மாத கால நீட்டிப்பு முடிவில் என்னென்ன அதிரடி அறிவிப்புகள் நிகழப்போகிறது என்பதை பார்க்க ஒட்டுமொத்த தமிழகமே ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறது.

Related Stories: